விஷால் ஆவேசம் - அரசு பேருந்தில் ரஜினியின் பேட்ட படம் ஒளிபரப்பியுள்ளனர்

ஜனவரி 10-ம் தேதி அஜித் நடித்த விஸ்வாசம் திரைப்படமும், ரஜினி நடிப்பில் பேட்ட திரைப்படமும் வெளியானது. இரண்டு படங்களுமே நல்ல வரவேற்பை பெற்று வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

இந்த இரண்டு படங்களும் இணையதளங்களில் வெளியிடக்கூடாது என நீதி மன்றம் தடை விதித்திருந்தது. ஆனால் தடையையும் மீறி திரைக்கு வந்த ஒரு சில மணிநேரங்களிலே இணையத்தில் இரண்டு படங்களும் வெளியாகி படக்குழுவினர்களை அதிரச் செய்தது.

திரைப்படங்களை திருட்டுதனமாக எடுத்து இணையதளங்களில் பதிவேற்றும் போக்கு இன்றளவும் கட்டுப்படுத்த முடியாத பெரும் சவாலாக இருக்கிறது. இதனால் திரையரங்க உரிமையாளர்கள் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.

சமீபத்தில் வெளியான ரஜினியின் பேட்ட திரைப்படத்தை யாரோ இணையதளத்தில் இருந்து பதிவிறக்கும் செய்து அரசு பேருந்து ஒன்றில் ஒளிபரப்பியுள்ளனர். இதனை ஒருவர் படம் பிடித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு கண்டனம் தெரிவித்திருந்தார்.

இதை நடிகரும், தயாரிப்பாளர் சங்க தலைவருமான விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து கண்டனம் தெரிவித்ததோடு அரசு பேருந்துகளில் திருட்டுத்தனமாக படங்களை ஒளிபரப்புவது இந்த வீடியோ மூலம் தெரிகிறது. இதற்கு அரசு தகுந்த நடவடிக்கை எடுக்கும் என நம்புவதாக கூறியிருக்கிறார்.