மலச்சிக்கல் பிரச்சனை தாங்க முடியவில்லையா? விரைவில் விடுபட சில வழிகள்!

மலச்சிக்கல் ஏற்படுவதற்கு உண்ணும் உணவுகளும், பழக்கவழக்கங்களும் தான் காரணம். ஒருவர் உடலுக்கு உழைப்பு ஏதும் கொடுக்காமல் உண்பது, உட்கார்ந்து வேலை செய்வது என்று இருந்தால், உணவுகள் சரியாக செரிமானமாகாமல், நாளடைவில் அது மலச்சிக்கலை உண்டாக்கும்.

அதிலும் ஆரோக்கியமற்ற ஜங்க் உணவுகள் சூழ்ந்திருக்கும் தற்போதைய காலத்தில், ஒவ்வொருவரும் மலச்சிக்கலால் அன்றாடம் அவஸ்தைப்பட நேரிடுகிறது. இந்த மலச்சிக்கல் பிரச்சனையை ஒருவர் ஆரம்பத்திலேயே கண்டு கொள்ளாமல் விட்டுவிட்டால், பின் மூல நோய் வரக்கூடும்.

மலச்சிக்கல் பிரச்சனைக்கு தீர்வளிக்கும் சில எளிய இயற்கை வழிகள் பார்கலாம்?

உலர் திராட்சை

உலர் திராட்சை மலச்சிக்கல் பிரச்சனைக்கு நல்ல தீர்வளிக்கும். அதற்கு சிறிது உலர் திராட்சையை இரவில் தூங்கும் முன் சுடுநீரில் ஊற வைக்க வேண்டும். பின் மறுநாள் காலையில் வெறும் வயிற்றில் உலர் திராட்சை சாப்பிடுங்கள். மறக்காமல் நீரையும் குடியுங்கள். இதனால் அவற்றில் உள்ள நார்ச்சத்து குடலியக்கத்தை சீராக்கி, மலச்சிக்கலில் இருந்து விடுவிக்கும்.

பப்பாளி

மலச்சிக்கலை சரிசெய்வதில் மிகச்சிறந்தது. அதற்கு மலச்சிக்கல் இருப்பவர்கள், தினமும் பப்பாளியை வெறும் வயிற்றில் அதிகாலையில் சாப்பிட்டு வர, அது குடலியக்கத்தை சீராக்குவதோடு, செரிமானத்தை சீராக்கி, மலச்சிக்கலில் இருந்து விடுவிக்கும்.

சுடுநீர் மற்றும் உப்பு

காலையில் எழுந்ததும் 1 டம்ளர் வெதுவெதுப்பான நீரில் சிறிது உப்பு சேர்த்து கலந்து குடியுங்கள். பின் 15 நிமிடம் கழித்து காலை உணவை உட்கொள்ளுங்கள். இப்படி செய்யும் போது குடலியக்கம் சிறப்பாக இருப்பதோடு, செரிமான மண்டலமும் ஆரோக்கியமாக செயல்பட்டு, மலச்சிக்கலில் இருந்து விடுவிக்கும்.

மலச்சிக்கல் தொல்லை தாங்க முடியவில்லையா? அப்படியானால் இரவு உணவு உட்கொண்ட பின் பேரிச்சம் பழத்தை சூடான பாலில் சிறிது நேரம் ஊற வைத்துக் கொள்ளுங்கள். பின் தூங்குவதற்கு முன் பேரிச்சம் பழத்துடன் பாலைக் குடியுங்கள். இப்படி செய்யும் போது, பேரிச்சம் பழத்தில் உள்ள நார்ச்சத்து குடலியக்கத்தை சீராகி, மலத்தை எளிதில் வெளியேற்ற உதவும்.

எலுமிச்சை ஜூஸ்

காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாற்றினைக் கலந்து குடிக்க வேண்டும். இதனால் மலச்சிக்கல் நீங்குவதோடு, உடல் மற்றும் மனம் புத்துணர்ச்சியுடன் இருக்கும்.