Follow Us:
Home/செய்திகள்/மத்திய பாஜக அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி
செய்திகள்

மத்திய பாஜக அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி

Tuesday, August 25, 2026iCineMass Editorial
மத்திய பாஜக அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி

நாடாளுமன்றத்தில் மத்திய அரசுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கை இல்லா தீர்மானம் தோல்வி அடைந்தது.

நரேந்திர மோடி அரசுக்கு ஆதரவாக 325 வாக்குகளும், எதிராக 126 வாக்குகளும் கிடைத்தன.

கடந்த 18-ம் தேதி நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியது.

முதல் நாளில் மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரக் கோரி தெலுங்கு தேசம் கட்சி சார்பில் சபாநாயகர் சுமித்ரா மகாஜனிடம் நோட்டீஸ் அளிக்கப்பட்டது. இதேபோல காங்கிரஸ் சார்பிலும் நோட்டீஸ் அளிக்கப்பட்டது.

அதனை லோக்சபா சபாநாயகர் சுமித்ரா மகாஜன் நேற்று முன்தினம் ஏற்றுக்கொள்வதாக அறிவித்தார். இதைத்தொடர்ந்து 20-ம் தேதியான நேற்று விவாதமும், வாக்கெடுப்பும் நடைபெறும் என்று சுமித்ரா மகாஜன் அறிவித்தார்.

இதைத்தொடர்ந்து மக்களவையில் நேற்று நம்பிக்கையில்லா தீர்மானம் மீது விவாதம் நடைபெற்றது.

இதற்காக ஒவ்வொரு கட்சிக்கும் நேரம் ஒதுக்கப்பட்டது. இதில் காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆவேசமாக பேசினார். பல்வேறு கட்சித் தலைவர்களும் பேசியதை தொடர்ந்து, இறுதியில் இரவு 9.15 மணி அளவில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். அப்போது, எதிர்க்கட்சிக்கு அதிகார பசி ஏற்பட்டுள்ளது என்று அவர் கடுமையாக விமர்சித்தார். நம்பிக்கை இல்லா தீர்மானத்தை நிராகரிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

இதைத்தொடர்ந்து இரவு 11 மணியளவில் நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடைபெற்றது.

இதில் தீர்மானத்துக்கு எதிராக (அரசுக்கு ஆதரவாக) 325 பேர் வாக்களித்தனர், தீர்மானத்துக்கு ஆதரவாக (அரசுக்கு எதிராக) 126 பேர் வாக்களித்தனர். மொத்தம் 451 எம்பிக்கள் வாக்களித்துள்ளனர்.

இதனால் அரசுக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம் 199 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்ததாக சபாநாயகர் சுமித்ரா மகாஜன் அறிவித்தார்.