சென்னை உயர் நீதிமன்றம் - ஏழை குடும்பங்களுக்கு ரூ.2,000 வழங்க தடை இல்லை

தமிழகத்தில் வறுமைக்கோட்டுக்கு கீழேயுள்ள உள்ள ஏழை குடும்பங்களுக்கு தலா ரூ.2000 நிதி உதவி வழங்கும் திட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

கடந்த 12-ம் தேதி முதல்வர் எடப்பாடி பழனிசாமி தமிழ்நாடு சட்டசபையில் 110-வது விதியின்கீழ் சில அறிவிப்புகளை வெளியிட்டார்.

தமிழ்நாடு முழுவதும் வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ள அனைத்து குடும்பங்களுக்கும், குறிப்பாக விவசாயத் தொழிலாளர்கள் , நகர்ப்புற ஏழைகள், கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்கள், பட்டாசுத் தொழிலாளர்கள், மீன்பிடி தொழிலாளர்கள், விசைத்தறி மற்றும் கைத்தறி தொழிலாளர்கள், கட்டுமானத் தொழிலாளர்கள் என அனைத்து தொழிலாளர்கள் குடும்பங்களுக்கும் தலா 2000 ஆயிரம் ரூபாய் சிறப்பு நிதியாக வழங்கப்படும் என அறிவித்தார்.

இதில் சுமார் 60 லட்சம் தொழிலாளர் குடும்பங்கள் பயனடைவார்கள் என்றும் தெரிவித்தார்.

இந்த உத்தரவுக்கு எதிராக, சட்டப்பஞ்சாயத்து இயக்கம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு நீதிபதிகள், மணிக்குமார், சுப்பிரமணிய பிரசாத் ஆகியோர் அமர்வு முன்னிலையில் விசாரிக்கப்பட்டது.

18 லட்சம் குடும்பங்கள்தான் வறுமைக்கோட்டுக்கு கீழே உள்ளது. ஆனால் 60 லட்சம் பேருக்கு நிதி உதவி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது என கணக்கெடுப்பு தவறாக உள்ளது சட்டப் பஞ்சாயத்து சார்பில் வாதிடப்பட்டது.

தமிழக அரசின் சார்பில் வாதிடுகையில், 2006ம் ஆண்டு முதல் ஏழை குடும்பங்களுக்கான கணக்கெடுப்பு நடத்தப்பட்டு, மாநிலத்தில் உள்ள 17 தொழிலாளர்கள் நல வாரிய உறுப்பினர்களின் அடிப்படையில் தமிழ்நாட்டில் சுமார் 60 லட்சம் குடும்பங்கள் வறுமைக்கோட்டுக்கு கீழே இருப்பதாக கண்டறிடப்பட்டுள்ளன.

இதற்காக அடையாள அட்டைகளும் வழங்கப்பட்டு வருகிறது. அந்த கணக்கெடுப்பு படிதான் அரசு இந்த முடிவுக்கு வந்தது. இவ்வாறு கூறி அதற்கான ஆதாரங்களை சமர்ப்பித்தார்.

ஏற்கனவே தமிழக அரசு ரூ.1200 கோடியை இந்த திட்டத்திற்காக ஒதுக்கீடு செய்துவிட்டது.

தவறானவர்களுக்கு இந்த தொகை போய்விடக்கூடாது என்பதற்காக, ஆன்லைன் மூலமாக நிதி வழங்குகிறோம். ஆதார் அட்டையை ஆதாரமாக எடுத்துக்கொள்கிறோம் என்று விளக்கம் அளித்தார்.

இதைதொடர்ந்து அரசின் இந்த உத்தரவுக்கு தடை கோரிய மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.