சென்னை எழும்பூர் நீதிமன்றம் நக்கீரன் கோபாலை சிறையில் அடைக்க உத்தரவிட முடியாது என்று வழக்கில் இருந்து நக்கீரன் ஆர்.கோபால் ஆசிரியர் விடுதலை செய்வதாக உத்தரவிட்டுள்ளது.
சென்னை விமான நிலையத்தில் நக்கீரன் ஆர்.கோபால் ஆசிரியர் இன்று காலை வைத்து கைது செய்யப்பட்டார். பேராசிரியை நிர்மலா தேவி குறித்த கட்டுரை காரணமாக, ஆளுநர் மாளிகை கொடுத்த புகாரின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நக்கீரன் ஆர்.கோபால் மீது இந்திய தண்டனை சட்டப் பிரிவு 124 அரசு உயர் பதவியில் இருப்பவர்களை பணி செய்ய விடாமல் தடுக்கும் வகையில் எழுதி கருத்துக்களை பரப்புதல் சட்டப் பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
சிந்தாதிரிப்பேட்டை காவல் துணை ஆணையர் அலுவலகத்தில் விசாரணை நடைபெற்றது. பின்னர் திருவல்லிக்கேணி கஸ்தூரிபாய் மருத்துவமனையில் நடைபெற்ற மருத்துவ பரிசோதனைக்கு பின்னர் நக்கீரன் ஆசிரியர் எழும்பூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார்.
ஊடக பிரதிநிதியாக மூத்த பத்திரிகையாளர் இந்து என்.ராம் நேரில் ஆஜராகி 124 பிரிவின் கீழ் கைது செய்யப்பட்டதற்கு எதிராக வாதாடினார்.
வழக்கை விசாரித்த நீதிபதி கோபிநாத், நக்கீரன் ஆர்.கோபால் மீது வழக்குப் பதிவு செய்ய அடிப்படை ஆதாரம் இல்லை என்று தெரிவித்தார். பத்திரிகை சுதந்திரத்துக்கும், கருத்து சுதந்திரத்துக்கும் நீதிமன்றம் பாதுகாப்பாக உள்ளது என்று தெரிவித்த நீதிபதி, நக்கீரன் ஆர்.கோபாலுக்கு நீதிமன்ற காவல் விதிக்க முடியாது என்று கூறி அவரை விடுவிப்பதாக அறிவித்தார்.
விடுதலைக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நக்கீரன் ஆசிரியர்:-
நீதித்துறை கருத்து துறையின் கீழ் நின்றது. ராஜ்பவன் சம்பந்தப்பட்ட ஒரு செய்தி நக்கீரனுக்கு வருகிறது. அதை நாங்கள் புலனாய்வு செய்து நக்கீரனில் வெளியிட்டோம்.
அதற்காக கைது செய்யப்பட்டேன். இறுதியில் கருத்துச்சுதந்திரம் வென்றது. இதற்காக துணைநின்ற அனைவருக்கு நன்றி என்று நக்கீரன் ஆசிரியர் தெரிவித்தார்.




