இன்று நடந்த தூத்துக்குடியில், ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் கலவரம் வெடித்ததை அடுத்து, போலீசார் போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தினர். அதில் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலியாகியுள்ளார்.
ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி தூத்துக்குடி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் இந்த போராட்டம் நேற்று 99வது நாளை எட்டியது. இன்று 100வது நாள் போராட்டம் நடக்கிறது.
ஸ்டெர்லைட் ஆலையைச் சுற்றியுள்ள பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பதால் அனைத்து பகுதிகளிலும் போலீசார் குவிக்கப்பட்டனர். ஆனால் தடையை மீறி இன்று பல்வேறு பகுதிகளில் போராட்டம் நடைபெறுகிறது.
ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறி வருகிறார்கள். ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டக்காரர்கள் காவல்துறையினரின் எச்சரிக்கையை மீறி ஆட்சியர் அலுவலகத்திற்குள் நுழைந்தனர்.
இதனால் போராட்டக்காரர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். கண்ணீர் புகை குண்டுகளை வீசியதுடன், துப்பாக்கிசூடும் நடத்தினர். இதனால் போராட்டக்காரர்கள் சிதறி ஓடினர்.
அதில் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலியாகியுள்ளார் மற்றும் பலர் காயமடைந்திருக்கலாம் என தெரிகிறது. அந்த பகுதியில் பதற்றமாக சூழல் காணப்படுகிறது.




