கேரள முதல்வர் பினராயி விஜயன், ஐக்கிய அரபு நாடுகள் ரூ.700 கோடி கொடுப்பதாக கூறியது உண்மைதான் என கூறியுள்ளார்.
சமீபத்தில் கடந்த 100 ஆண்டுகள் இல்லாத அளவிற்கு, கேரளவில் மழை பெய்தது. இதனால் அங்குள்ள அணைகள் நிரம்பி அவை திறந்துவிடப்பட்டன. இதனால் அங்குள்ள 14 மாவட்டங்களையும் வெள்ள நீர் சூழ்ந்து கொண்டது. இதையடுத்து நிவாரண நிதியை தாராளமாக வழங்குமாறு கேரளா முதல்வர் பினராயி விஜயன் கேட்டுக் கொண்டார்.
கேரள மாநிலத்துக்கு வெள்ள நிவாரண நிதி இந்தியா மட்டுமன்றி உலகம் முழுவதும் பல நாடுகளில் இருந்து வந்தது. மத்திய அரசு சார்பில் ரூ.600 கோடி வெள்ள நிவாரண நிதியாக வழங்கப்பட்டது.
இந்நிலையில் ஐக்கிய அரபு நாடுகள் ரூ.700 கோடியை நிதியாக வழங்குவதாக பினராயி விஜயன் தெரிவித்தார்.
இந்த நிதியுதவியை மத்திய அரசு மறுப்பதாகவும் செய்திகள் வந்தன. இந்நிலையில் ரூ.700 கோடி நிதியை தருவதாக தாங்கள் எந்த உத்தரவாதத்தையும் தெரிவிக்கவில்லை என்று ஐக்கிய அரபு நாடுகள் தெரிவித்தன.
இதுகுறித்து ஐக்கிய அரபு நாடுகளின் டெல்லி தூதரகத்தில் அதிகாரிகள் கூறுகையில் கேரள நிவாரண நிதியாக தாங்கள் நிதியுதவி வழங்குவதாக எந்த வித அறிவிப்பையும் யுஏஇ சார்பில் வெளியிடவில்லை என்று தெரிவித்தனர்.
மேலும், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு என்ன நிதியுதவி செய்யலாம் என்பதை அடுத்த சில நாட்களில் வளைகுடா நாடுகள் முடிவு செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பினராயி விஜயன் மேலும் கூறுகையில், வெளிநாடு வாழ் தொழிலதிபர் எம்.ஏ. யூசுப் அலி பக்ரீத் பண்டிகையின்போது வாழ்த்து கூற அரபு அரசரை சந்தித்தார். அப்போது அவர் யூசுப் அலியிடம் கேரளத்துக்கு ரூ 700 கோடி நிதியதவி வழங்குவதாக தெரிவித்தாராம். அதை யூசுப் அலி என்னிடம் கூறினார்.
உடனே நான் இதுகுறித்து பத்திரிகை செய்திகளுக்கு அறிவிக்கலாமா என கேட்டேன். அவரும் அறிவித்து கொள்ளுங்கள் ஒன்றும் பிரச்சினை இல்லை என்றார். அதன்பேரில் எனது டுவிட்டர் பக்கத்திலும் செய்தியாளர்கள் சந்திப்பிலும் கூறினேன் என பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.




