இஸ்ரோ அறிவிப்பு – சந்திரயான்-2 ஜூலை 22-ம் தேதி விண்ணில் பாய்கிறது

வரும் ஜூலை 22-ம் தேதி சந்திராயன் 2 விண்கலம் பிற்பகல் 2.43 மணிக்கு விண்ணில் ஏவப்படும் என்று இஸ்ரோ அறிவித்துள்ளது.

கடந்த 15-ம் தேதி திட்டமிட்டப்படி சந்திராயன் 2 விண்கலத்தை விண்ணில் ஏவ தயாரான போது, கடைசி நேரத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதன் காரணமாக கவுண்டவுன் பாதியிலேயே நிறுத்தப்பட்டு, சந்திராயன் 2 விண்ணில் செலுத்துவது ரத்து செய்யப்பட்டது.

நிலவின் தென் துருவ பகுதியில் ஆராய்ச்சி செய்வதற்காக இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு இஸ்ரோ மேற்கொண்டுள்ள கனவு திட்டம் சந்திரயான்-2 ஆகும்.

இதுவரை எந்த நாடுமே கால்பதிக்காத நிலவின் தென்துருவத்தை ஆராய்ச்சி செய்ய இஸ்ரோ சந்திராயன் 2 விண்கலத்தை தயார் செய்தது.

நிலவின் மேற்பரப்பு மற்றும் மேற்பரப்பிற்கு அடியில், நிலவின் வெளிப்புறத்தில் தண்ணீர் மூலக்கூறுகளின் விநியோக அளவு ஆகியவற்றை கண்டறிய செய்வதற்காக சந்திரயான்-2 உருவாக்கப்பட்டது.

இந்த சந்திரயான்-2 விண்கலத்தை ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 ராக்கெட் மூலம் கடந்த 15-ந் தேதி அதிகாலை 2.51 மணிக்கு சென்னையை அடுத்த ஸ்ரீஹரிகோட்டாவில் சதீஷ் தவான் விண்வெளி மையத்தின் 2-வது ஏவுதளத்தில் இருந்து விண்ணில் செலுத்துவதற்கு எல்லா ஏற்பாடுகளும் செய்யப்பட்டன.

இந்நிலையில் கோளாறு காரணமாக சந்திரயான்-2 விண்கலத்தை விண்ணில் பறக்க விடுவது நிறுத்தப்பட்டது.

தற்போது ராக்கெட்டில் ஏற்பட்டிருந்த தொழில்நுட்ப கோளாறை சரி செய்து விட்டதாக இஸ்ரோ வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்த நிலையில் சந்திரயான்-2 ஜூலை 22-ம் தேதி விண்ணில் செலுத்த உள்ளதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.