துணை ராணுவ வீரர்கள் 44 பேர் பலி - ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகள் வெடிகுண்டுத் தாக்குதல்

ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் உயிரிழந்த துணை ராணுவ வீரர்களின் எண்ணிக்கை 44 -ஆக உயர்ந்துள்ளது.

இந்த சம்பவம் காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் நடந்திருக்கிறது.

காஷ்மீர் மாநிலத்தில் துணை ராணுவ வீரர்கள் விடுமுறை முடிந்து பணிக்கு நேற்று அதிகாலை 7௦ வாகனங்களில் ஜம்முவில் இருந்து பள்ளதாக்கு பகுதிக்கு திரும்பி கொண்டிருந்தனர்.

புல்வாமா மாவட்டம் ஸ்ரீநகர் - ஜம்மு நெடுஞ்சாலையில் அவந்திப்போரா பகுதியில் சென்றபோது, பயங்கரவாதி ஒருவன் வெடி குண்டுகள் நிரப்பிய சொகுசு காரை வேகமாக ஓட்டி வந்து ராணுவ வீரர்கள் வந்த ஒரு பஸ் மீது மோதினான்.

இதில் வெடிகுண்டுகள் பலத்த சத்தத்துடன் பயங்கரமாக வெடித்தது பொது, பேருந்து வெடித்துச் சிதறியதில் ஏராளமான வீரர்கள் உயிரிழந்தனர். முதலில் 10 பேர் உயிரிழந்ததாக அறிவிப்பு வெளியானது. பின்னர் 12, 25, 40 என அதிகரித்து தற்போது 44 வீரர்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர்களது உடல்கள் சாலையில் சிதறி கிடந்தன. படுகாயம் அடைந்து கிடந்த வீரர்களை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

இந்த கொடூர தாக்குதலுக்கு பாகிஸ்தானை தலைமையிடமாக கொண்டு செயல்படும் மசூத் அசார் தலைமையிலான ஜெய்ஷ்- இ- முகமது பயங்கரவாத அமைப்பு பொறுப்பு ஏற்று உள்ளது.

துணை ராணுவ வீரர்கள் சென்ற வாகனங்கள் மீது நடந்த தற்கொலை தாக்குதலில் சமீப காலங்களில் நடந்த மோசமான, மிகப்பெரிய தாக்குதல் ஆகும்.

இந்த தாக்குதலின் பின்னணியில் பாகிஸ்தான் இருப்பதாக மத்திய அரசு குற்றம்சாட்டியுள்ளது.

தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, வீரர்களின் தியாகம் வீண்போகாது. உயிரிழந்த வீரர்களின் குடும்பத்தினரோடு இந்த நாட்டு மக்கள் அனைவரும் உள்ளனர். காயம் அடைந்தவர்கள் விரைவில் குணம்பெற பிரார்த்திக்கிறேன் என்று கூறியுள்ளார்.

தாக்குதலை அமெரிக்கா கண்டித்துள்ளது. தீவிரவாதத்தை ஒழிப்பதற்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்வோம் என்று அமெரிக்க கூறியுள்ளது.