முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி காஷ்மீரில் புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த தமிழக வீரர்களின் குடும்பத்தில் தலா ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.
ஜம்மு - காஷ்மீர் மாநிலம், புல்வாமா மாவட்டத்தில் ராணுவ வாகனத்தின் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 40 சிஆர்பிஎஃப் படையினர் வீரமரணமடைந்தனர். இவர்களில் இருவர் தமிழகத்தை சேர்ந்தவர்கள் ஆவர்.
முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்:-
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி வட்டம், சவலப்பேரி கிராமத்தைச் சேர்ந்த கணபதி மகன் சுப்பிரமணியன் மற்றும் அரியலூர் மாவட்டம், கார்குடியைச் சேர்ந்த சின்னையன் மகன் சி. சிவசந்திரன் ஆகிய இரண்டு வீரர்கள் உயிரிழந்துள்ளனர் என்ற செய்தி எனக்கு மிகுந்த மனவேதனை அளித்தது.
மத்திய பாதுகாப்புப் படை வீரர்கள் சுப்பிரமணியன் மற்றும் சிவசந்திரன் ஆகியோரின் குடும்பத்திற்கு தலா 20 லட்சம் ரூபாய் உடனடியாக வழங்க நான் நேற்று உத்தரவிட்டேன்.
இந்த நிலையில் தற்போது அவர்களது குடும்பத்தில் தலா ஒருவருக்கு அரசு பணி வழங்கவும் நான் உத்தரவிட்டுள்ளேன் இவ்வாறு அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.