கோடைக்காலத்தில் ஏற்படும் உடல் சூட்டை தடுப்பதற்கான சில எளிய வழிமுறைகள்

கோடைக்காலம் ஆரம்பித்துவிட்ட நிலையில், சூரியக்கதிர்கள் நம்மை சுட்டெரித்துக் கொண்டிருக்கின்றன. இதனால் உடலில் எரிச்சல் ஏற்படுவதோடு, ஆற்றலை இழந்து, உடல் அதிக வெப்பம் அடையும். இப்படி உடல் வெப்பம் அதிகமானால், அதனால் உடலில் பல பிரச்சனைகள் ஏற்படக்கூடும்.

உடல் சூட்டை தணிக்கும் சில எளிய வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன.

வெந்தயம்

வெந்தயம் உடல் வெப்பத்தைக் குறைக்க உதவும் பொருட்களில் முதன்மையான ஒன்று. அதற்கு 1 டீஸ்பூன் வெந்தயத்தை இரவில் படுக்கும் போது, ஒரு டம்ளர் நீரில் போட்டு ஊற வைத்து, மறுநாள் காலையில் அந்த நீரை குடிக்க வேண்டும். அல்லது அதன் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் அப்படியே வாயில் போட்டு விழுங்க வேண்டும். இதனாலும் உடல் வெப்பம் குறையும்.

இளநீர்

காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் இளநீர் குடித்து வந்தால், அதில் உள்ள வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள், உடல் வெப்பத்தைக் குறைத்து, உடல் வறட்சி ஏற்படுவதையும் தடுக்கும்.

தண்ணீர் அதிகம் குடிக்கவும்

கோடையில் மற்ற காலங்களை விட அதிக அளவில் தண்ணீரைக் குடிக்க வேண்டும்.

ஏனெனில் சூரியக்கதிர்கள் நம் சருமத்தில் அதிக அளவில் படுவதால், நம் உடலில் உள்ள நீர்ச்சத்துக்கள் குறைந்துவிடும். மேலும் நீர்ச்சத்து குறைவதால் உடலின் வெப்பநிலையும் அதிகரிக்கும்.

எனவே இக்காலத்தில் தண்ணீரை அதிக அளவில் குடித்து வந்தால், அவை உடல் சூட்டைத் தணிக்கும்.

முலாம் பழம்

கோடையில் அதிகம் கிடைக்கும் முலாம் பழத்தை வாங்கி, அதனை ஜூஸ் போட்டு குடித்து வந்தால், அதில் உள்ள அதிகப்படியான நீர்ச்சத்தும், பொட்டாசியமும், கோடை பிரச்சனைகளில் இருந்து பாதுகாப்பு அளிக்கும்.

தர்பூசணி

கோடையில் தாகத்தை தணிப்பதற்கு தர்பூசணி ஒரு சிறந்த பழம்.

இத்தகைய பழத்தை அப்படியே சாப்பிட பிடிக்காதவர்கள், அதனை ஜூஸ் போன்று செய்து குடிக்கலாம். மேலும் அதிக பசியுடன் இருப்பவர்களோ அல்லது டயட்டில் இருப்பவர்களோ, தர்பூசணி ஜூஸை குடித்தால், பசி அடங்கிவிடும்.

மேலும் உடல் எடையை குறைக்க நினைப்போருக்கும், கர்ப்பிணிகளுக்கும் இந்த ஜூஸ் சிறந்தது.

மாதுளை ஜூஸ்

கோடைக்காலத்தில் தினமும் காலையில் ஒரு டம்ளர் மாதுளை ஜூஸ் குடித்து வர வேண்டும். இதனால் உடலில் உள்ள அதிகப்படியான வெப்பம் குறைவதைக் காணலாம்.

சந்தனம்

சந்தனம் மற்றும் மூல்தானி மெட்டி இரண்டிற்குமே உடல் வெப்பத்தை தணிக்கும் திறன் உள்ளது. எனவே இவற்றில் பால் சேர்த்து, அவ்வப்போது முகத்திற்கு மாஸ்க் போட்டு வந்தால், உடல் வெப்பம் குறையும்.

முக்கிய குறிப்பு:

காரமான உணவுகளை கோடையில் அதிகம் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் காரமான உணவுகளை அதிகம் உட்கொள்ளும் போது, அது உடலின் மெட்டபாலிசத்தை அளவுக்கு அதிகமாக உயர்த்தி, உடல் வெப்பத்தை அதிகரிக்கும். எனவே கோடையில் எப்போதும் அளவான காரம் கொண்ட உணவுகளை உட்கொண்டு வர வேண்டும்.