வரும் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக - பாமக கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தான நிலையில், 7 தொகுதிகள் பாமகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.
நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக - பாஜக - பாமக கூட்டணி உருவாகியுள்ளது.
முதல்கட்டமாக அதிமுக - பாமக இடையே இன்று கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்றது. சென்னை நந்தனம் அருகே உள்ள கிரவுன் பிளாசா ஓட்டலில் இன்று காலை கூட்டணி தொடர்பான முக்கிய பேச்சுவார்த்தை நடைபெற்றது.
இதில் பாமக நிறுவனர் ராமதாஸ், பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ், பாமக தலைவர் ஜி.கே.மணி ஆகியோருடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இந்த பேச்சுவார்த்தையின் முடிவில், பாராளுமன்றத் தேர்தல் தொடர்பாக கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது.
கூட்டணி ஒப்பந்தத்தில் அ.தி.மு.க சார்பில், ஓ.பி.எஸ்., ஈ.பி.எஸ் கையெழுத்திட்டனர்.
பா.ம.க சார்பில் அக்கட்சியின் தலைவர் ஜி.கே.மணி கையெழுத்திட்டார்.
இதனையெடுத்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ஓ பன்னீர் செல்வம், ராமதாஸ் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, பாமகவுக்கு 7 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக ஓ.பி.எஸ் கூறினார்.
மேலும் ஒரு ராஜ்ஜிய சபா இடமும் அளிக்கப்பட்டுள்ளது. 21 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு பாமக ஆதரவு அளிக்கும் என்றும் குறிப்பிட்டார்.
பாமக போட்டியிடும் 7 தொகுதிகள் என்னென்ன என்பது குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என ராமதாஸ் தெரிவித்தார்.
ராமதாஸ் 10 கோரிக்கைகளை முன்வைத்தே அ.தி.மு.கவுடன் பா.ம.க கூட்டணி வைத்துள்ளது.
காவிரி பாசன பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண்மை மண்டலமாக அறிவிக்க வேண்டும்.
நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும்.
தமிழகத்தில் ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும்.
அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.
தமிழர்கள் 7 பேரை விடுதலை செய்ய வேண்டும் என்பது மிக முக்கியமான கோரிக்கை.
தமிழகத்தில் படிப்படியான மதுவிலக்கு - 500 மதுக்கடைகளை உடனடியாக மூட வேண்டும்.
காவிரியின் குறுக்கே மேகதாதுவில் கர்நாடகாவை தடுப்பணை கட்ட அனுமதிக்க கூடாது என போன்ற கோரிக்கைகளை முன்வைத்தே கூட்டணி வைத்துள்ளது என்றார்.