உச்ச நீதிமன்றம் - ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதியில்லை

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்கக்கோரி மேல் முறையீட்டு வழக்கில், உச்ச நீதிமன்றம் அனுமதி அளிக்க மறுத்து, பசுமை தீர்ப்பாயம் பிறப்பித்த உத்தரவுக்கும் தடை விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளது.

கடந்த ஆண்டு மே மாதம் 22-ம் தேதி தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி கலெக்டர் அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டம் நடந்தது. அப்போது கலவரம் ஏற்பட்டதை தொடர்ந்து, போலீசார் நடத்திய துப்பாக்கி சூடு மற்றும் தடியடியில் 13 பேர் பலியானார்கள்.

இதைத்தொடர்ந்து அரசு ஸ்டெர்லைட் ஆலையை மூட அரசாணை வெளியிட்டு ஆலை மூடப்பட்டது.

இதனை எதிர்த்து ஆலை தரப்பில் வேதாந்தா நிறுவனம், தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இதை விசாரித்த தேசிய பசுமை தீர்ப்பாயம், சில நிபந்தனைகளுடன் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி அளித்தது.

இதனை எதிர்த்து தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. ஆலையை திறக்க நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி வேதாந்தா நிறுவனம் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அதே நேரம் ஆலையை நிரந்தரமாக மூட உத்தரவிடக்கோரி மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மற்றும் சமூக ஆர்வலர் பாத்திமா பாபு ஆகியோரும் மனுத் தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்ததையடுத்து, தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில் இந்த வழக்குகளின் மீது நீதிபதி ரோஹிந்தன் ஃபாலி நாரிமன் தலைமையிலான அமர்வு இன்று தீர்ப்பளித்தது.

தீர்ப்பில் ஆலையை திறக்க அனுமதி அளிக்க நீதிபதிகள் மறுத்துள்ளனர். தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்ற தமிழக அரசின் கோரிக்கை ஏற்கப் பட்டுள்ளது.

வேதாந்தா நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தை அனுகி அனுமதி பெற்றுக்கொள்ள நீதிபதிகள் குறிப்பிட்டனர்.

மேலும் ஆலையை திறக்கக்கோரி தொடரப்பட்ட அனைத்து வழக்குகளையும் நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.