பொள்ளாச்சி பாலியல் கொடூர சம்பவம் - 4 பேர் மீதும் குண்டர் சட்டம்

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் கொடூர வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள 4 பேரையும் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் ராசாமணி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

பொள்ளாச்சியில் சுமார் நூற்றுக்கணக்கான கல்லூரி மாணவிகள், இளம்பெண்களிடம் சமூக வலைதளங்கள் மூலம் நண்பர்களாக பழகி, காதலிப்பதாக கூறி பாலியல் வன்கொடுமை செய்து மிரட்டி பணம் பறித்து வந்துள்ளனர்.

இந்த இளம்பெண்களை பாலியல் பலாத்காரம் செய்த சம்பவங்களை வீடியோவாக எடுத்து மிரட்டியதாக, திருநாவுக்கரசு, சபரிராஜன், சதீஷ், வசந்தகுமார் ஆகிய 4 பேரை போலீஸார் கைது செய்தனர்.

கைதுசெய்யப்பட்ட சபரி, சதீஷ் மற்றும் வசந்த் குமாரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட மொபைல் போன்களில் 40 பெண்களின் ஆபாச வீடியோக்களை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர். அவர்களிடம் இருந்த வீடியோ பதிவுகளைக் காட்டியே இவர்கள் பெண்களை மிரட்டி பணம் மற்றும் நகைகளை வாங்கியுள்ளனர் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த வழக்கு குறித்து மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளர் பாண்டியராஜன் தலைமையில் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இச்சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதில் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அரசியல் கட்சியினர் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்த, மாவட்ட எஸ்.பி. பாண்டியராஜன், கைதான திருநாவுக்கரசு உள்ளிட்ட 4 பேர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தில் வழக்குப் பதிவு செய்யக் கோரினார்.

இதையடுத்து, 4 பேர் மீதும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் வழக்குப் பதிவு செய்ய மாவட்ட ஆட்சியர் ராஜாமணி உத்தரவிட்டார்.

கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்தப்பட்டு வரும் விசாரணையில் இன்னும் பலர் சிக்கக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.