உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் 8-வது லீக் ஆட்டத்தில், தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான போட்டியில் இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இங்கிலாந்தில் நடைப்பெற்று வரும் கிரிக்கெட் உலக கோப்பை தொடரின் 8-வது லீக் ஆட்டம் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையே நேற்று சவுதாம்ப்டன் நகரில் நடைப்பெற்றது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா முதலில் பேட்டிங் தேர்வு செய்து விளையாடியது.
தென் ஆப்ரிக்கா அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 227 ரன்களை குவித்தது. இதில் அதிகபட்சமாக கிறிஸ் மோரிஸ் 42 ரன்களும் கேப்டன் டுபிளெசிஸ் 38 ரன்களும் எடுத்தனர். சஹல் அற்புதமாக பந்து வீசி 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். புவனேஷ்வர் குமார் மற்றும் பூம்ரா தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
இதனையடுத்து 228 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் இந்தியா களமிறங்கியது.
துவக்க வீரராக களமிறங்கிய தவான் மற்றும் ரோகித் ஷர்மா ஆகியோர் களம் இறங்கினர். தவான் மற்றும் விராட் அடுத்தடுத்து ஆட்டமிழக்க, ரோகித் ஷர்மா இறுதி வரை நின்று விளையாடி சதம் அடித்து அணியின் வெற்றியை உறுதி செய்தார். 144 பந்துகளில் 122 ரன்கள் குவித்தார் ரோகித் ஷர்மா, இதில் 2 சிக்ஸர்கள் மற்றும் 13 பவுண்டரிகளுடன் அடங்கும்.
இந்திய அணி இறுதியில் 47.3 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 230 ரன்கள் எடுத்து. தென் ஆப்பிரிக்கா அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது.
தென் ஆப்பிரிக்க அணியின் சார்பில் ரபாடா 2 விக்கெட்டும், கிறிஸ் மோரிஸ் மற்றும் பெலக்வாயோ தலா 1 விக்கெட்டும் கைப்பற்றினர். ஆட்ட நாயகனாக ரோசித் சர்மா தேர்வு செய்யப்பட்டார்.
இதன் மூலம் இந்திய அணி இந்த தொடரில் தனது முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது.