இந்திய அணி - வெஸ்ட் இண்டீஸ் எதிரான கடைசி போட்டியில் வெற்றி பெற்று 3-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது
இந்திய அணி 5-வது கடைசி ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 3-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையிலான 5-வது கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி திருவனந்தபுரத்தில் இன்று நடைபெற்றது.
இதில் டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் பேட்டிங் செய்தது.
வெஸ்ட் இண்டீஸ் அணியின் கிரன் பொவேல், ரோவ்மன் பொவேல் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். கீரன் பவல் டக் அவுட் ஆகி வெளியேற, பின்னர் வந்த சாய் ஹோப்பும் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார்.
தொடர்ந்து வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களுக்கு வரிசையாக அவுட்டாகி சென்றனர். கேப்டன் ஜேசன் ஹோல்டர் 25 ரன்கள் எடுத்ததே அந்த அணியின் தனி ஒரு வீரரால் எடுக்கப்பட்ட அதிகபட்ச ரன்கள்.
இறுதியில் வெஸ்ட் இண்டீஸ் 31.5 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 104 ரன்கள் மட்டுமே எடுத்தது.
ஜடேஜா அபாரமாக பந்துவீசிய 4 விக்கெட்களை சாய்த்தார். அஹமத், பும்ரா தலா இரண்டு விக்கெட்களை எடுத்தனர்.
105 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி விளையாடத் தொடங்கியது.
தொடக்க வீரர்களாக தவான், ரோகித் சர்மா ஆகியோர் களம் இறங்கினார்கள். ஷிகர் தவான் 6 ரன்னில் ஆட்டமிழந்தார். பின்னர் ரோகித் சர்மா உடன் விராட் கோலி ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அதிரடி ஆட்டத்தில் வெளிப்படுத்தியது.
விராட் கோலி நிதானமாக விளையாட, ரோகித் சிக்ஸர்களும் பவுண்டரிகளுமாக விளாசினார். ரோகித் சர்மா அரைசதம் அடித்தார்.
14.5 ஓவர்களில் இந்திய அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 105 ரன்கள் எடுத்து 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரை 3-1 என்ற கணக்கில் இந்தியா வென்றது.
ஒரு நாள் போட்டிகளில் 6 முறையாக தொடர்ந்து விராட் கோலி தலைமையில் சொந்த மண்ணில் தொடரை வென்றது இந்தியா அணி.
ஜடேஜா ஆட்டநாயகனாகவும், விராட் கோலி தொடர் நாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டனர்.