விராட் கோலி முக்கியமான கட்டத்தில் கிடைத்த இந்த வெற்றி என் மனைவிக்கான பிறந்தநாள் பரிசு
மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக எங்களுக்கு கிடைத்த வெற்றி, எங்களுக்கு தேவையானதாக இருந்தது. போட்டியின் முக்கியமான கட்டத்தில் கிடைத்த இந்த வெற்றி சிறப்பானது என்று விராட் கோலி தெரிவித்துள்ளார்.
ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடரில் பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடந்த 31-வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி பதிலடி கொடுத்தது.
முதலில் ஆடிய பெங்களூரு அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 167 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக மனன்வோரா 45 ரன்னும், பிரன்டன் மெக்கல்லம் 37 ரன்னும், கேப்டன் விராட்கோலி 32 ரன்னும் எடுத்தனர்.
பின்னர் மும்பை அணி இலக்கை நோக்கி ஆடிய 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 153 ரன்களே எடுத்து தோல்வியை சந்தித்தது. அதிகபட்சமாக ஹர்திக் பாண்ட்யா 50 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தனர்.
பெங்களூரு அணியின் வேகப்பந்து வீச்சாளர் டிம் சவுதி ஆட்டநாயகன் விருது பெற்றார்.
தற்போது பெங்களூரு அணி 8 போட்டிகளில் 3 வெற்றி, 5 தோல்வி, 6 புள்ளிகளுடன் 5-ம் இடத்தில் இருக்கிறது.