இந்தியா முதல் டி-20 போட்டியில் குல்தீப் - கே.எல்.ராகுல் அதிரடியால் வெற்றி !

இந்தியா முதல் டி-20 போட்டியில், இங்கிலாந்துக்கு எதிரான 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் மூன்று டி-20 போட்டிகளிலும், 3 ஒருநாள் போட்டிகளிலும், 5 டெஸ்ட் போட்டிகளிலும் விளையாட உள்ளது.

நேற்று மான்செஸ்டரில் நடைபெற்ற முதல் டி20 போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பீடிங்கை தேர்வு செய்தது.

இங்கிலாந்து அணியில் ஜேசன் ராய் மற்றும் ஜேசி பட்லர் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். இருவரும் இங்கிலாந்து அணிக்கு நல்லதொரு தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர்.

20 ஓவர்கள் முடிவில் இங்கிலாந்து அணி 8 விக்கெட்டுகளை இழந்து 159 ரன்கள் எடுத்தது.

இந்தியத் தரப்பில் குல்தீப் யாதவ் அபாரமாக பந்து வீசி 5 விக்கெட்களை வீழ்த்தினார். உமேஷ் யாதவ் 2, ஹார்திக் பாண்டயா 1 விக்கெட்டை வீழ்த்தினார்.

இந்தியாவுக்கு 160 ரன்கள் வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக ஷிகர் தவான் மற்றும் ரோஹித் சர்மா களமிறங்கினர். தவான் 4 ரன்களுடன் வெளியேற கே.எல்.ராகுல் களமிறங்கினார். வழக்கம்போல தனது அதிரடி ஆட்டத்தை ராகுல் வெளிப்படுத்தினார்.

கே.எல்.ராகுல் அபாரமாக விளையாடி 101 ரன்கள் எடுத்து இந்தியாவின் வெற்றியை உறுதி செய்தார்.

18.2 ஓவர்களிலேயே 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து இந்திய அணி 163 ரன்கள் எடுத்து வெற்றி இலக்கை எட்டியது.

இதன் மூலம் இந்திய அணி 1 - 0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.