நடிகர் ரஜினிகாந்த் - கர்நாடகாவில் காலா திரைப்படம் வெளியாகும்
நடிகர் ரஜினிகாந்த் காலா திரைப்படம் கர்நாடகாவில் வெளியாகும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் நடித்த காலா படம் வருகிற 7-ம் தேதி தமிழ்நாடு மற்றும் உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகிறது.
காலா படத்தை கர்நாடகத்தில் திரையிட சில கன்னட அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று தமிழகத்துக்கு ஆதரவாக ரஜினி குரல் கொடுத்ததால் ரஜினி படத்தை வெளியிட எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதையடுத்து கர்நாடக திரைப்பட வர்த்தக சபை 'காலா' திரைப்படத்திற்கு தடை விதித்துள்ள நிலையில், அந்த மாநிலத்தில் திரைப்படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
காலா படத்தை ரிலீஸ் செய்வது குறித்து, கர்நாடக வர்த்தக சபையுடன், தேசிய திரைப்பட அமைப்பு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
இந்நிலையில் ரஜினிகாந்த் செய்தியாளர்களிடம் பேட்டியளித்துள்ளார்
பொழுதுபோக்குக்காக எடுக்கப்படும் ஒரு திரைப்படத்தை சமூக பிரச்சனையை சுட்டிக்காட்டி எதிர்ப்பது சரியல்ல. சினிமா வேறு, அரசியல் வேறு. இது பலருக்கும் புரியவில்லை.
கர்நாடகாவில் காலா திரைப்படம் நிச்சயம் ரிலீஸ் ஆகும். இப்படத்திற்கு எதிர்ப்பு வரும் என நான் எதிர்பார்த்தேன். ஆனால் நான் எதிர்பார்த்ததை விட எதிர்ப்பு குறைவாகவே இருக்கிறது. காலா ரிலீஸ் செய்வதில் ஐயா தேவகவுடா உதவியாக இருப்பார் என நம்புகிறேன் என ரஜினிகாந்த் பேட்டியளித்தார்.