18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் மாறுபட்ட தீர்ப்பு !
அ.இ.அ.தி.மு.க. 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில், இரு நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்பை அளித்துள்ளதால் 3-வது நீதிபதி பெஞ்சுக்கு இவ்வழக்கின் தீர்ப்பு மாற்றப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு 18 எம்.எல்.ஏ-க்கள், முதல்வருக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய காரணத்தால், சபாநாயகர் தனபால் 18.9.2017 அன்று 18 பேரை தகுதிநீக்கம் செய்து உத்தரவிட்டார். இதை எதிர்த்து 18 எம்.எல்.ஏ.க்களும் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, ஐகோர்ட்டு மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை 18 தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்துவது தொடர்பாக எந்த அறிவிப்பும் வெளியிடக்கூடாது என்றும், நம்பிக்கை வாக்கெடுப்பும் நடத்தக்கூடாது என்றும் 20.9.2017 அன்று உத்தரவிட்டார்.
அந்த வழக்கு தலைமை நீதிபதி இந்திராபானர்ஜி, நீதிபதி சுந்தர் ஆகியோர் தலைமையிலான முதன்மை அமர்வுக் மாற்றப்பட்டது. இந்த வழக்கு தொடர்ந்து விசாரிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று இறுதி தீர்ப்பு அளிக்கப்பட்டு உள்ளது.
இன்று மதியம் 1.40 மணிக்கு நீதிபதிகள் தீர்ப்பு வழங்கினர். அப்போது, 18 எம்.எல்.ஏ.க்களையும் தகுதி நீக்கம் செய்தது செல்லும் என தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தீர்ப்பளித்தார். அதேசமயம் தகுதிநீக்கம் செல்லாது என நீதிபதி சுந்தர் தீர்ப்பு கூறினார்.
இரு நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்பை அளித்துள்ளதால் 3-வது நீதிபதி பெஞ்சுக்கு இவ்வழக்கின் தீர்ப்பு மாற்றப்பட்டுள்ளது.