இன்று கர்நாடகத்தின் 24-வது முதல்வராக குமாரசாமி பதவியேற்றார் !
இன்று கர்நாடகத்தின் 24-வது முதல்வராக குமாரசாமி பதவியேற்றார். அவருடன் துணை முதல்வராக காங்கிரஸை சேர்ந்த பரமேஸ்வராவும் பதவி ஏற்றார்.
கர்நாடகாவில் நடந்த 222 தொகுதிகளுக்கு சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக 104 தொகுதிகளில் வெற்றி பெற்று பெரிய கட்சியாக உருவெடுத்தது. காங்கிரஸ் 78, மஜத, பகுஜன் சமாஜ் கூட்டணி 38, சுயேச்சைகள் - 2 இடங்களில் வெற்றி பெற்றனர். இதனால் தொங்கு சட்டசபை அமைந்தது.
எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காததால் காங்கிரஸ், மஜதவை ஆதரித்தது. ஆனால் தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த பாஜக 104 தொகுதிகளில் வெற்றி பெற்று, கடந்த 17-ம் தேதி எடியூரப்பா தலைமையில் ஆட்சி அமைத்தது.
ஆனால் சுப்ரீம் கோர்ட்டு தலையிட்டு கடந்த 19-ந் தேதி கர்நாடக சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிட்டது. பெரும்பான்மை இல்லாததால், எடியூரப்பா தலைமையிலான பாஜக அரசு நம்பிக்கை வாக்கெடுப்பை சந்திக்காமலே முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்.
மஜத கட்சியின் மாநில தலைவர் குமாரசாமி கர்நாடக ஆளுநர் வஜூபாய் வாலாவை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார். அதன்படி இன்று முதல்வராக பதவியேற்றுள்ளார். அவருடன் துணை முதல்வராக காங்கிரஸை சேர்ந்த பரமேஸ்வராவும் பதவி ஏற்றார்.
ஆளுநர் வஜுபாய் வாலா பதவிப்பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். நம்பிக்கை வாக்கெடுப்பு நாளை (வியாழக்கிழமை) நடக்கிறது.