இந்தியா அபார வெற்றி - வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 4-வது ஒருநாள் போட்டியில் !
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான நான்காவது ஒருநாள் போட்டியில் 244 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட்இண்டீஸ் கிரிக்கெட் அணி 5 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரில் விளையாடி வருகிறது.
நேற்று நான்காவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி மும்பை பிராபோர்ன் மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி பேட்டிங் தேர்வு செய்தார்.
இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மா, ஷிகர் தவான் ஆகியோர் களம் இறங்கினார்கள். ஷிகர் தவான் 40 பந்துகளில் 38 ரன்கள், எடுத்து கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
அடுத்து களம் இறங்கிய கேப்டன் விராட்கோலி தொடர்ச்சியாக 4-வது சதம் அடிப்பார் என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. விராட்கோலி 17 பந்துகளில், 16 ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட் கீப்பர் ஷாய் ஹோப்பிடம் கேட்ச் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
3-வது விக்கெட்டுக்கு அம்பத்தி ராயுடு, ரோகித் சர்மாவுடன் ஜோடி சேர்ந்தார். ரோஹித் சர்மா அதிரடி காட்டினார். 21 வது ஒருநாள் சதத்தை பூர்த்தி செய்தார் ரோஹித் ஷர்மா. இதில் 20 பவுண்டரிகள், 4 சிக்ஸர்கள் பறக்க விட்ட அவர், 137 பந்துகளில் 162 ரன்கள் குவித்தார்.
அம்பதி ராயுடு தனது மூன்றாவது ஒருநாள் சதத்தை பூர்த்தி செய்தார். கடைசியில் இந்தியா 50 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 377 ரன்கள் குவித்தது.
378 எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் மேற்கிந்தியத் தீவுகள் அணி களமிறங்கியது. இந்திய வீரர்களின் பந்துவீச்சால் வெஸ்ட்இண்டீஸ் அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் விழுந்து கொண்டே இருந்தது. 50 ரன்களுக்குள் அந்த அணி 5 விக்கெட்டை இழந்தது.
37 ஓவர்களில் 153 ரன்களுக்கு ரன்களுக்கு வெஸ்ட்இண்டீஸ் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியடைந்தது. கேப்டன் ஹோல்டர் 54 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இந்திய வீரர் கலீல் அஹ்மத் 5 ஓவர்கள் வீசி 13 ரன்கள் மட்டுமே கொடுத்து 3 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தினார். குல்தீப் யாதவ் 42 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளும், புவனேஷ்வர் மற்றும் ஜடேஜா தலா 1 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.