ஆசிய கோப்பை - வங்காளதேசத்துக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியா அபார வெற்றி !

நேற்று நடைபெற்ற ஆசிய கோப்பை சூப்பர் - 4 சுற்றில் வங்காளதேச அணிக்கு எதிரான ஆட்டத்தில், இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

ஆசியக் கோப்பை கிரிக்கெட்டின் சூப்பர் – 4 சுற்றின் முதல் போட்டியில், இந்தியா - வங்கதேசம் அணிகள் நேற்று மோதின.

இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா, முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி 49.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 173 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக மெஹிதி ஹசன் 42 ரன்களும், மோர்டசா 26 ரன்களும் எடுத்தனர்.

இந்தியா அணி சார்பில் ரவீந்திர ஜடேஜா 4 விக்கெட்டுகளும், புவனேஷ்வர் குமார் மற்றும் பும்ரா தலா 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

இதைத்தொடர்ந்து இந்திய அணி தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் ரோகித் சர்மாவும், ஷிகர் தவானும் களமிறங்கினர். நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய இவர்கள் இந்திய அணிக்கு சிறப்பான தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர்.

இறுதியில் இந்திய அணி 36.2 ஒவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 174 ரன்களை எடுத்து அபார வெற்றி பெற்றது. கேப்டன் ரோஹித் சர்மா 83 ரன்கள் எடுத்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இந்த போட்டியில் 4 விக்கெட்டுக்களை வீழ்த்திய ஜடேஜா ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.