விராட் கோலி, ரோஹித் சர்மா அபார சதத்தால் இந்திய அணி வெற்றி
வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் விராட் கோலி, ரோஹித் சர்மா இருவரின் அபார சதத்தால், இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.
இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையே 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் நடத்தப்படுகிறது.
நேற்று முதலாவது ஆட்டம் கவுகாத்தியில் நடந்தது. போட்டியில் டாஸ் வென்ற இந்தியா பந்துவீச்சு தேர்வு செய்துள்ளது.
வெஸ்ட் இண்டீஸ் அணி 50 ஓவர்களில் 8 விக்கெட்கள் இழப்பிற்கு 322 ரன்கள் எடுத்தது.
இதனையடுத்து 323 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி பேட்டிங் செய்தது. இதில் தவான் 4 ரன்களில் அவுட்டானார். அவரைத் தொடர்ந்து விராட் கோலியும், ரோகித் ஷர்மாவும் அதிரடியாக விளையாடத் தொடங்கினார்.
விராட் கோலி அதிரடியாக ஆடி 88 பந்துகளில், 36-வது சதத்தை பூர்த்தி செய்தார். ரோஹித் சர்மா அதிரடியாக ஆடி தனது 20-வது சதத்தை பூர்த்தி செய்தார். இறுதியாக விராட் கோலி 140 ரன்களில் அவுட்டானார்.
அவரைத் தொடர்ந்து ராயுடு, ரோஹித் சர்மாவுடன் இணைந்தார். இந்த ஜோடி அணியின் வெற்றி இலக்கை 42.1 ஓவர்களில் கடந்தது. இதன் மூலம் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.
இரு அணிகளுக்கு இடையிலான 2-வது ஒருநாள் போட்டி வரும் 24-ம் தேதி நடைபெறும்.