ஆசிய கோப்பை - பாகிஸ்தான் அணிக்கு எதிரான ரோஹித், தவான் சதத்தால் இந்தியா மிகப் பெரிய வெற்றி!
ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்றில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் தவான் மற்றும் ரோகித் சர்மா இருவரும் அபார சதமடித்து, 9 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா மிகப் பெரிய வெற்றியை பெற்றுள்ளது.
நேற்று இந்தியா - பாகிஸ்தான் இடையிலான ‘சூப்பர் 4’ சுற்று ஆட்டம் துபாயில் நடைபெற்றது.
டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது. துவக்கத்தில் இந்திய வீரர்களின் பந்துவீச்சை சமாளிக்க முடியாத பாகிஸ்தான் துவக்க வீரர்கள், இமாம் உல் ஹக் 10, பாக்கர் சமான் 31 ரன்களில் வெளியேறினர். அடுத்து பாபர் ஆசாம் 9 ரன்களில் ரன் அவுட் ஆனார்.
4-வது விக்கெட்டுக்கு பாகிஸ்தான் கேப்டன் சர்ப்ராஸ், அனுபவ ஷோயப் மாலிக் இணைந்து 107 ரன்களுக்கு கூட்டணி அமைத்து ரன்கள் சேர்த்தனர்.
இறுதியில் 50 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் 7 விக்கெட் இழப்பிற்கு 237 ரன்களே எடுத்தது. இந்திய அணி சார்பில் பும்ரா, சாஹல், குல்தீப் யாதவ் தலா இரண்டு விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்கள்.
238 ரன்கள் எடுத்தால் வெற்றி எனும் இலக்குடன் இந்தியா சேசிங் செய்ய தொடங்கியது. தவான், ரோஹித் இருவரும், முதல் விக்கெட்டுக்கு 210 ரன்கள் சேர்த்து கலக்கினர்.
ஷிகர் தவான் தனது 15 சதத்தை அடித்து அசத்தினார். அடுத்த சில நிமிடங்களில் 114 ரன்கள் எடுத்த நிலையில், ரன் அவுட் ஆனார் தவான். 106 பந்துகளில் தனது 19 ஒரு நாள் சதத்தை பதிவு செய்தார் ரோகித் சர்மா.
மேலும், ஒருநாள் போட்டிகளில் 7000 ரன்களை கடந்து புதிய சாதனை செய்தார் ரோஹித்.
இறுதியில் 39.3 ஓவர்கள் முடிவில் 238 ரன்கள் குவித்து பாகிஸ்தான் அணியை அடித்து நொறுக்கி இந்தியா 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.