விராட் கோலி பெருமிதம் - ஆஸி.க்கு எதிரான தொடரை வென்றதே எனது மிகப்பெரிய சாதனை

விராட் கோலி ஆஸ்திரேலிய மண்ணில் முதல் முறையாக டெஸ்ட் தொடரை வென்றது மிகுந்த மகிழ்ச்சியை அளிப்பதாகவும் இதை தனது மிகப்பெரிய சாதனையாக கருதுவதாகவும் கூறியுள்ளார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளது.

72 ஆண்டுகளுக்கு பிறகு ஆஸ்திரேலிய மண்ணில் இந்தியா டெஸ்ட் தொடரை வென்றுள்ளது.

ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை வென்ற முதல் ஆசிய அணி என்ற பெயரையும் இந்தியா பெற்றுள்ளது.

செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி கூறியதாவது:-

ஆஸ்திரேலிய மண்ணில் முதல் முறையாக டெஸ்ட் தொடரை வென்றது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. இதை எனது மிகப்பெரிய சாதனையாக கருதுகிறேன்.

இந்த தொடரை கைப்பற்ற புஜாரா மிகமுக்கிய பங்காற்றினார், அவருடன் இணைந்து இளம் வீரா்களான ரிஷப் பண்ட், மயங்க் அகா்வாலுக்கும் பாராட்டுகளை தொறிவித்துக் கொள்கிறேன்.

இந்திய அணிக்கு சர்வதேச அளவில் வித்தியாசமான தோற்றத்தை இந்த வெற்றி அளித்திருக்கிறது. எங்களுடைய மாற்றம் இங்கிருந்து தொடங்குகிறது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர் வெற்றி எங்களுக்கு வித்தியாசமான அடையாளத்தை அளித்திருக்கிறது.

எங்களால் சாதிக்க முடியும் என்பதை வெளிக்காட்டி இருக்கிறது, பெருமைப்பட வைத்துள்ளது.

நான் கேப்டனாக பொறுப்பேற்றபோது, 4 ஆண்டுகளுக்குப் பின் ஒரே ஒரு வார்த்தை மட்டும் சொல்கிறேன். இந்த அணியை வழிநடத்திச் செல்வதில் நான் பெருமைப்படுகிறேன், எனக்குக் கிடைத்த மிகப்பெரிய கவுரவம், சிறப்புரிமையாக கருதுகிறேன்.

என்னை மிகச்சிறந்த கேப்டனாக அணி வீரர்கள் மாற்றி இருக்கிறார்கள் என இவ்வாறு விராட் கோலி தெரிவித்தார்.