நியூசிலாந்துக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டியிலும் இந்தியா வெற்றி - தொடரை வென்றது
இந்திய அணி, நியூசிலாந்துக்கு எதிரான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன், தொடரையும் கைப்பற்றியது.
இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் போட்டி தொடரில் விளையாடி வருகிறது.
இதில் இந்திய அணி நேப்பியரில் நடந்த முதலாவது ஆட்டத்தில் 8 விக்கெட் வித்தியாசத்திலும், மவுண்ட் மாங்கானுயில் நடந்த 2-வது ஆட்டத்தில் 90 ரன்கள் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றது.
இந்நிலையில் இரு அணிகளுக்கிடையிலான 3-வது ஒரு நாள் போட்டி மவுண்ட் மாங்கானுயில் இன்று நடைபெற்றது.
நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன் ‘டாஸ்’ வென்று தனது அணி முதலில் பேட்டிங் செய்யும் என்று அறிவித்தார். இந்திய வீரர்களின் அபாரமான பந்து வீச்சால் நியூசிலாந்து அணி திணறியது. 59 ரன் எடுப்பதற்குள் அந்த அணி 3 விக்கெட்டை இழந்தது.
ஒரு முனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுமுனையில் இருந்த ரோஸ் டெய்லர் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். சதத்தை நெருங்கிய டெய்லர், 93 ரன்னில் ஆட்டம் இழந்தார்.
பின்னர் நியூசிலாந்து அணி, 49 ஓவர்களில் 243 ரன்னில் ‘ஆல் அவுட்’ ஆனது.
இதையடுத்து 244 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களறமிறங்கிய இந்திய அணிக்கு ரோகித் சர்மா, தவானின் தொடக்கம் சிறப்பாக இருந்தது.
அதிரடியாக ஆடிய தவான், 27 பந்தில் 28 ரன்கள் சேர்த்து (6 பவுண்டரி) ஆட்டமிழந்தார். 2-வது விக்கெட்டுக்கு இணைந்த ரோகித் சர்மா - விராட் கோலி ஜோடி அபாரமாக விளையாடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தியது.
ரோகித் சர்மா 62 ரன்களிலும், விராட் கோலி 60 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அதன்பின்னர் அம்பதி ராயுடு-தினேஷ் கார்த்திக் ஜோடியும் சிறப்பாரமாக விளையாடிய இருவரும் அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றனர்.
இதனால் 42 பந்துகள் மீதமிருந்த நிலையில், இந்தியா 3 விக்கெட் இழப்பிற்கு 245 ரன்கள் சேர்த்து, 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ராயுடு 40 ரன்களுடனும், தினேஷ் கார்த்திக் 38 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
இந்த வெற்றியின் மூலம், 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றி உள்ளது.