நடிகர் ரஜினிகாந்த் காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் நடந்த சிஆர்பிஎப் வீரர்கள் மீதான தீவிரவாத தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் துணை ராணுவப்படையினரின் வாகனங்களை குறிவைத்து பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 40-க்கும் மேற்பட்ட வீரர்கள் கொல்லப்பட்டனர்.
இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ளது. பயங்கரவாதிகளுக்கு பல்வேறு தரப்பில் இருந்து கண்டனம் குவிந்து வருகிறது.
இதுகுறித்து அரசியல் தலைவர்களும், சினிமா நட்சத்திரங்களும் நாடு முழுவதும் தமது கண்டனங்களைத்தெரிவித்துவரும் நிலையில் நடிகர் ரஜினியும் மிக ஆவேசமாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்:-
ஜம்மு-காஷ்மீர் புல்வாமாவில் பயங்கரவாதிகள் நடத்திய மன்னிக்க முடியாத தாக்குதலை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.
போதும் பொறுத்தது போதும், காட்டுமிராண்டித்தனங்களுக்கு கொஞ்சமும் பொறுமை காட்டாமல் உடனுக்குடன் பதிலடி கொடுக்கவேண்டிய நேரம் வந்துவிட்டது என்று காட்டமாகக் கூறியுள்ளார்.
உயிரிழந்த மற்றும் படுகாயமடைந்த வீரர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். வீரமரணம் அடைந்த வீரர்களின் ஆன்மா சாந்தியடையட்டும் என தெரிவித்துள்ளார்.