சர்கார் படத்திற்கு எதிராக - விஜய் மற்றும் படக்குழுவுக்கு நீதிமன்றம் நோட்டீஸ்
சமீபத்தில் வெளியான சர்கார் பட போஸ்டரில் உள்ள புகைப்பிடிக்கும் காட்சிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் நடிகர் விஜய், இயக்குநர் முருகதாஸ் மற்றும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் ஆகியோருக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் சர்கார் படத்தின் ஃபர்ஸ்ட் லூக் போஸ்டரை கடந்த 21-ம் தேதியன்று படக்குழுவினர் வெளியிட்டனர்.
இந்த போஸ்டரில் நடிகர் விஜய் கருப்பு கண்ணாடியுடன், சிகரெட் புகைப்பது போன்ற பட காட்சி இடம்பெற்றது.
இந்த ஃபர்ஸ்ட் லூக் புகைப்படத்திற்கு பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் கடும் கண்டனம் தெரிவித்தார். மேலும் இதற்கு சமூகநல அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து தமிழக அரசின் பொது சுகாதாரத்துறை "சர்கார்" பட போஸ்டரில், விஜய் புகைப்பிடிப்பதுபோல் உள்ள காட்சிகளை நீக்க வேண்டும் என அறிவுறுத்தியிருந்தது.
இதைத்தொடர்ந்து சன்பிக்சர்ஸ் நிறுவனம் விஜய் புகைப்பிடிக்கும் காட்சியை தனது டுவிட்டர் பக்கத்திலிருந்து நீக்கியது.
அதில் ஃபர்ஸ்ட் லூக் போஸ்டரில் புகைப்பிடிக்கும் காட்சியை விளம்பரப்படுத்தியதாக படத்தின் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ், நடிகர் விஜய் மற்றும் தயாரிப்பு நிறுவனம் சென்னை அடையார் புற்றுநோய் மையத்திற்கு தலா ரூ.10 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என்று பொதுநல வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் விஜய், ஏ.ஆர்.முருகதாஸ், சன் பிக்சர்ஸ் நிறுவனம் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில் 2 வாரத்திற்குள் பதிலளிக்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.