அதிமுக எதிர்ப்பு - ஒரே நேரத்தில் தேர்தல் ?

மாநில சட்டசபை மற்றும் பாராளுமன்றத்திற்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதற்கு அதிமுக எதிர்ப்பு தெரிவித்து தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

மாநில சட்டமன்றங்களுக்கும், பாராளுமன்றத்திற்கும், ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் மத்திய அரசின் திட்டம் தொடர்பாக ஆலோசனை நடத்துவதற்காக டெல்லியில் நாளை சட்ட ஆணைய கூட்டம் நடைபெறுகிறது.

தமிழக அரசின் சார்பில் துணை சபாநாயகர் தம்பிதுரை, அமைச்சர் சி.வி.சண்முகம் பங்கேற்க உள்ளனர்.

ஒரு நாடு, ஒரே தேர்தல் திட்டத்திற்கு அ.தி.மு.க. எதிர்ப்பு தெரிவித்துள்ள தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக அதிமுக சார்பில் கடந்த மாதம் 29-ம் தேதி, தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதி உள்ளனர்.

ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் முறைக்கு ஜெயலலிதா ஏற்கனவே எதிர்ப்பு தெரிவித்திருந்தார் என்றும் அதிமுக சார்பில் எழுதப்பட்டுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது

அந்த கடிதத்தில் கூறப்பட்டிருப்பதாவது:-

நிலையான ஆட்சியை தரவேண்டும் என்பதற்காக 2016ல் மக்கள் அதிமுகவுக்கு வாய்ப்பளித்தனர். தமிழக சட்டசபைக்கு ஆயுட்காலம் 2021ல் நிறைவடைகிறது. தேர்தல் சமயத்தில் நிறைவேற்றுவதாக பல்வேறு வாக்குறுதிகளை மக்களுக்கு கொடுத்துள்ளோம்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக தேர்தல் வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றினாலும், இன்னும் பல வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட உள்ளன.

சட்டமன்றத்தின் ஆயுட்காலத்தை குறைப்பதால் மக்கள் விரும்பிய நிலையான ஆட்சி பாதிக்கப்படும். ஒரே சமயத்தில் தேர்தல் என்ற திட்டத்தால் தமிழக சட்டசபையின் ஆயுட்காலத்தை குறைக்க கூடாது என்று இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.