தலைமை நீதிபதி கருத்து - ஜெயலலிதாவுக்கு நினைவிடம் கட்டக்கூடாது !

மறைந்த முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதாவுக்கு நினைவிடம் கட்டக்கூடாது என்பதுதான் என்னுடைய தனிப்பட்ட விருப்பமாகும் என்று ஐகோர்ட்டு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி கருத்து தெரிவித்துள்ளார்.

தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா கடந்த 2016 ஆம் ஆண்டு டிசம்பர் 5ஆம் தேதி மரணமடைந்தார்.

டிராபிக் ராமசாமி மெரினா கடற்கரையில் ஜெயலலிதா நினைவிடம் கட்டுவதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

அந்த மனுவில் கடற்கரை ஒழுங்குமுறை மண்டல விதிமுறைகளை மீறி மெரினா கடற்கரையில் எந்தக்கட்டிடமும் கட்டக்கூடாது என்று தடை விதிக்க வேண்டும் என்றும் அதில் கூறியிருந்தார்.

இந்த வழக்கை தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி பி.டி.ஆஷா ஆகியோர் விசாரித்தனர்.

அரசு தரப்பு வக்கீல் ஜெனரல் விஜய்நாராயண் ஆஜராகி வாதாடுகையில், இந்த நினைவு மண்டபம் கடலோர மண்டல வழிமுறைகளை வகுப்பதற்கு முன்பே மெரீனாவில் கட்டப்பட்ட எம்.ஜி.ஆர் நினைவிடம் உள்ள வளாகத்திற்கு உள்ளாகவே கட்டப்படுகிறது.

இதில் எவ்வித விதி மீறல்களும் இல்லை. மேலும் அமைக்கப்படவிருக்கும் நினைவு மண்டபத்தின் வரைபடத்தை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய இருப்பதாகவும் வாதிட்டார்.

அரசு தரப்பு வாதத்தை கேட்ட நீதிபதி இந்திரா பானர்ஜி உலகிலேயே 2-வது மிக நீளமான கடற்கரையாக மெரினா கடற்கரை விளங்குகிறது. சாலையில் செல்லும் மக்கள் எந்தவொரு இடையூறுமின்றி கடற்கரையின் அழகை கண்டு ரசிக்க வேண்டும்.

மெரினா கடற்கரையில் எந்தவொரு கட்டிடமும் கட்டக்கூடாது என்பதுதான் என்னுடைய தனிப்பட்ட விருப்பம், இருந்தாலும் இருதரப்பு வாதத்தையும் கேட்ட பிறகுதான் தீர்ப்பு வழங்கப்படும்.

இந்த விசாரணையை வருகிற 25-ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.