நடிகர் ரஜினிகாந்த் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடவில்லை என்றும், எந்த கட்சிக்கும் தனது ஆதரவு இல்லை என்று அறிவித்துள்ளார்.
இன்று காலை போயஸ் தோட்டத்தில் மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்களுடன் ரஜினிகாந்த் அவசர ஆலோசனை நடத்தினார். இதில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது.
அதன் பிறகு நடிகர் ரஜினிகாந்த் ஒரு அறிக்கை வெளியிட்டார்.
ரஜினிகாந்த் தனது அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
வருகிற பாராளுமன்ற தேர்தலில் நான் போட்டியிடப் போவதில்லை. தமிழக சட்டமன்ற தேர்தல் தான் எங்களது இலக்கு.
நடைபெற இருக்கும் பாராளுமன்ற தேர்தலில் என்னுடைய ஆதரவு எந்தக் கட்சிக்கும் கிடையாது. அதனால் ரஜினி மக்கள் மன்றம் மற்றும் ரஜினி ரசிகர் மன்றத்தின் பெயரில் என்னுடைய படமோ மன்றத்தின் கொடியோ, எந்தக் கட்சிக்கும் ஆதரவாகவோ, பிரசாரம் செய்வதற்காகவோ யாரும் பயன்படுத்தக்கூடாது.
தமிழ்நாட்டின் முக்கிய பிரச்சனை தண்ணீர். வர இருக்கும் தேர்தலில், மத்தியில் நிலையான, வலுவான ஆட்சி அமைத்து யார் தமிழ்நாட்டின் தண்ணீர் பிரச்சனையை நிரந்தரமாக தீர்த்து வைக்கக் கூடிய திட்டங்களை வகுத்து அதை உறுதியாக செயல்படுத்துவார்கள் என்று நம்புகிறீர்களோ, அவர்களுக்கு நீங்கள் சிந்தித்து ஆராய்ந்து தவறாமல் வாக்களிக்கும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.