கருணாஸ் அதிரடியாக கைது - அக். 5 வரை சிறையில் அடைக்க எழும்பூர் கோர்ட் உத்தரவு!

இன்று அதிகாலை நடிகரும், சட்டமன்ற உறுப்பினருமான கருணாஸை போலீஸார் அதிரடியாக கைது செய்தனர்.

சர்ச்சைக்குரிய வகையில் முதல்வரையும், காவல்துறையையும் பேசிய விவகாரத்தில் கருணாஸை அக்டோபர் 5-ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டுள்ளார் எழும்பூர் நீதிமன்ற நீதிபதி கோபிநாத்.

கடந்த 16-ம் தேதி வள்ளுவர் கோட்டத்தில் நடந்த ஆர்ப்பாட்டம் ஒன்றில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி தன்னை கண்டு அஞ்சுவதாகவும், திநகர் போலீஸ் துணை ஆணையர் அரவிந்தனுக்கு கொலை மிரட்டல் விடுக்கும் தொனியில் பேசினார்.

மேலும் வன்முறையை தூண்டும் அளவுக்கு அவரது பேச்சு இருந்தது. இதையடுத்து அவர் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில் கருணாசை சாலிகிராமத்தில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து போலீசார் இன்று அதிகாலை அதிரடியாக கைது செய்தனர்.

பின்பு சென்னை நுங்கம்பாக்கம் காவல் நிலையத்துக்கு அழைத்து செல்லப்பட்ட அவரிடம் 3 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து அவர் எழும்பூர் 13-வது நீதிமன்ற நீதிபதி கோபிநாத் வீட்டில் ஆஜர்படுத்த காவல் நிலையத்தில் இருந்து கருணாஸ் அழைத்து வரப்பட்டார்.

அப்போது கருணாஸை அக்டோபர் 5-ம் தேதி வரை நீதிமன்ரக் காவலில் வைக்க உத்தரவிட்டார். மேலும் கருணாஸ் மீதான கொலை முயற்சி பிரிவை (307) ரத்து செய்தும் நீதிபதி கோபிநாத் உத்தரவிட்டார்.

கைதாகி வேனில் ஏற்றும் முன்பு ஊடகங்களிடம் பேசிய கருணாஸ்:-

சட்டமன்ற உறுப்பினரான என்னை கைது செய்ய சபாநாயகரின் அனுமதி வேண்டும். ஆனால், என்னை கைது செய்ய சபாநாயகரிடம் காவல்துறை அனுமதி பெற்றதா என தெரியவில்லை.

இந்த வழக்கை சட்டப்பூர்வமாக நீதிமன்றத்தில் சந்திப்பேன் என கருணாஸ் தெரிவித்தார்.