உச்சநீதிமன்றம் அதிரடி - தாஜ்மஹாலை பராமரியுங்கள் அல்லது இடித்துத் தள்ளுங்கள்!

உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹாலை பாதுகாக்க முடியவில்லை என்றால், அதை இடித்துத் தள்ளுங்கள் என்று உச்ச நீதிமன்றம் நீதிபதிகள் ஆவேசத்துடன் மத்திய அரசையும், உத்தரப்பிரதேச அரசையும் எச்சரித்தனர்.

ஆக்ராவில் உள்ள தாஜ்மஹால் அமைந்துள்ள பகுதியில் ஏராளமான தொழிற்சாலைகள் உருவாகி வருவதால் வெள்ளை பளிங்கு கல்லால் கட்டப்பட்ட தாஜ்மஹால், தற்போது செம்பழுப்பு நிறத்திற்கு மாறி வருகிறது.

இதனால் தாஜ்மஹாலை பாதுகாக்க மத்திய அரசு தவறிவிட்டதாக உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடுக்கப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதிகள் மதன் பி.லோகுர் மற்றும் தீபக் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது.

நீதிபதிகள் கூறியது:-

பிறநாடுகளில் உள்ள உலக அதிசயங்களை பாதுகாக்க, எந்த அளவிற்கு முக்கியத்துவம் வழங்கப்படுகிறது என்பதை பார்க்கும்போது நமக்கு மகிழ்ச்சியாக உள்ளது.

அதேசமயம் வரலாற்று நினைவு சின்னமான தாஜ்மஹாலை பாதுகாக்க அத்தகைய முக்கியத்துவம் அளிக்கப்படுகிறதா என்ற கேள்வி எழுகிறது?.

தாஜ்மகாலை பாதுகாப்பது பற்றி உ.பி அரசுக்கு கவலையில்லை. இதுவரை பாதுகாப்பது தொடர்பான எந்த திட்டத்தையும் சமர்ப்பிக்கவில்லை. தாஜ்மஹாலை உரிய முறையில் அழகை பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்க வேண்டும். இல்லையென்றால் அதனை மூடி விடலாம் அல்லது இடித்து தள்ளி விடலாம் என கூறியுள்ளனர்.

மேலும் தாஜ்மஹாலை பாதுகாக்க எடுக்கப்போகும் நடவடிக்கை என்ன என்கிற விவரங்களை இரண்டு வாரகாலத்திற்குள் சமர்ப்பிக்க மத்திய அரசுக்கு உத்தரவிடப்படுகிறது. வழக்கு வரும் 31ம் தேதியிலிருந்து தினசரி அடிப்படையில் விசாரிக்கப்படும் என்று இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.