ஏர்செல் மேக்சிஸ் வழக்கு ப.சிதம்பரம், கார்த்தி கைது செய்ய தடை நீட்டிப்பு !

ஏர்செல் - மேக்சிஸ் வழக்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரத்தை கைது செய்ய நீதிமன்றம் விதித்த தடையை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2006-ம் ஆண்டு முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம், அவர் பதவியில் இருந்த போது ஏர்செல் நிறுவன பங்குகள் மலேசியாவில் உள்ள மேக்சிஸ் நிறுவனத்துக்கு விற்பனை செய்யப்பட்டது.

இதில் சிதம்பரம் மகன் கார்த்தி சிதம்பரமும் உதவி செய்ததாகவும் இதன்மூலம் அவரும் அவரது நிறுவனமும் பயனடைந்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டது.

மேக்சிஸ் நிறுவனத்தில் விற்கப்பட்டதில் முறைகேடுகள் குறித்து முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் சிபிஐ போலீசாரால் கைது செய்யப்பட்டு தற்போது ஜாமீனில் உள்ளார்.

மேலும் இந்த வழக்கில் முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தையும் விசாரிக்க சிபிஐ சம்மன் அனுப்பியது.

முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் தன்னை கைது செய்வதற்கு எதிராக, முன்ஜாமீன் வேண்டுமென டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். அந்த விசாரணையில் ஜூலை 10-ம் தேதிவரை அவரை கைது செய்ய நீதிமன்றம் தடை விதித்திது வழக்கு விசாரணையை ஜூலை 10-ம் தேதிக்கு ஒத்திவைத்தது.

அதன் படி இன்று நடைபெற்ற விசாரணையில் ப. சிதம்பரத்தை ஆகஸ்ட் 7-ம் தேதி வரை கைது செய்ய தடை நீட்டிக்கப்பட்டு உள்ளது. அது போல கார்த்தி சிதம்பரத்தையும் ஆகஸ்ட் 7-ம் தேதி வரை கைது செய்ய தடையை நீட்டித்து டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.