தாய்லாந்து குகையில் சிக்கிய சிறுவர்கள் அனைவரும் மீட்பு ! - முழு விவரம்..!!
தாய்லாந்தில் குகையில் சிக்கியிருந்த 12 சிறுவர்களையும், அவர்களது பயிற்சியாளரையும், 17 நாட்கள் போராட்டத்திற்கு பிறகு உயிருடன் மீட்டுள்ளதாக தாய்லாந்து கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
எப்படிக் காணாமல் போனார்கள்?
தாய்லாந்தின் சியாங் ராய் மாகாணத்தில் 11 வயது முதல் 16 வயது வரையிலான சிறுவர்கள் குழு ஒன்று ஜூலை 23-ம் தேதி கால்பந்து விளையாடியுள்ளது.
குகையை பார்க்க சென்ற சிறுவர்கள்
அன்றைய ஆட்டம் முடிந்தவுடன், அந்த சிறுவர்கள் மற்றும் அவர்களது கால்பந்து பயிற்சியாளருடன், தாய்லாந்தில் நாட்டின் சியாங்ராய் மாகாணத்தில் உள்ள சுமார் 10 கி.மீ. நீளமுள்ள, ஆழமான தாம் லுவாங் என்ற மலைக்குகையை பார்ப்பதற்காக சென்றுள்ளனர்.
சிறிய குறுகலான நுழைவாயில்களைக் கொண்ட அந்த குகைக்குள் அத்தனை பேரும் ஊர்ந்து சென்றுள்ளனர்.
குகைக்குள் மாட்டிய சிறுவர்கள்
தாய்லாந்தில் இது மழைக்காலம் என்பதால், அப்போது திடீர் கனமழை பெய்ததால் 10 கி.மீ. நீளம் உடைய குகையில் காட்டு வெள்ள நீர் புகுந்து, குகையின் வெளியேறும் வாயில்களை அடைத்துக் கொண்டதால், இதனால் உள்ளே சென்றவர்கள் வெளியே வரமுடியாமல் குகைக்குள்ளே சிக்கியுள்ளனர்.
தாய்லாந்து தேசிய பூங்காவின் காவலர், சிறுவர்களின் மிதிவண்டிகளைக் குகைக்கு வெளியே கேட்பாரற்று நிற்பதை பார்த்திருக்கிறார். நேரமாகியும் வீடு திரும்பாததால் சிறுவர்களைத் அவர்களது பெற்றோர்களும் தேடியுள்ளனர்.
இதனை தொடர்ந்து காவலாளியின் தகவலை வைத்து பார்த்தபோது, அத்தனைச் சிறுவர்களும் குகைக்குள் போயிருப்பது உறுதியானது.
சம்பவ இடத்திற்கு விரைந்த கடற்படை
சம்பவ இடத்திற்கு விரைந்த தாய்லாந்து கடற்படையின் மீட்புக்குழுவினர், குகையின் வாயில்களை தண்ணீர் சூழ்ந்துள்ளதைக் கண்டறிந்துள்ளனர்.
குகைக்குள் தேங்கியிருந்த தண்ணீரை ராட்சஸ பம்புகள் மூலம் வெளியில் எடுக்கும் பணிகள் முடுக்கிவிடப்பட்டன.
உலகின் பல நாடுகளைச் சேர்ந்த முக்குளிப்பு வீரர்களும், குகை மீட்பு வீரர்களும் தாய்லாந்தில் குவிந்தனர்.
இந்நிலையில் சிறுவர்களின் பெற்றோர்களும், அவர்களது உறவினர்களும் குகையை சுற்றிக் கூடினர். மேலும் சிறுவர்கள் அனைவரும் உயிருடன் வெளியே வரவேண்டும் என்று, இரவு பகலாக பிரார்த்தனை செய்ய தொடங்கினர்.
கண்டறியப்பட்ட சிறுவர்கள்
எல்லோரும் உயிருடன் மீட்கப்படுவார்களா என்று மொத்த உலகமும் எதிர்பார்த்துக்கொண்டிருந்த போது, 9 நாள் போராட்டத்துக்குப் பிறகு, ஜூலை 2-ம் தேதி பிரிட்டிஷ் குகை மீட்பு வீரர்கள், சிறுவர்களையும், அவர்களின் பயிற்சியாளரையும் குகை வாயிலில் இருந்து 4 கி.மீ. தூரத்தில் ஒரு பாறை மேட்டுப்பகுதியில் உயிருடன் இருப்பது கண்டுபிடித்தனர்.
இந்த குகை அமைப்பு ஒரு மலையின் அடிப்புறத்தில் அமைந்துள்ளது. மலையின் உச்சியில் இருந்து சிறுவர்கள் சிக்கியுள்ள இடம் சுமார் 1 கி.மீ. ஆழத்தில் இருந்தது.
சிறுவர்களோடு பிரிட்டிஷ் குகை மீட்பு வீரர்கள் நிகழ்த்திய உரையாடல் அடங்கிய விடியோ பதிவு ஒன்றும் வெளியானது, எல்லோருக்கும் நம்பிக்கையையும் உற்சாகத்தையும் தந்தது.
ஆனால் வெளியே வருவதற்கு சிறுவர்கள் நீந்தவேண்டும் அதற்கு முக்குளிக்கக் கற்றுக் கொண்டு வெள்ளம் சூழ்ந்த குகையை நீந்திக் கடக்கவேண்டும் அல்லது வெள்ளம் வடியும் வரை சுமார் 3 மாதம் குகையிலேயே காத்திருக்கவேண்டும், சரியாக திட்டமிடும் வரை சிறுவர்கள் உள்ளேயே இருக்கலாம். அவர்களுக்கு தேவையான உணவும், உயிர் காக்கும் கருவிகளும் வெளியிலிருந்து அனுப்பப்படும் என்று அறிவித்தது தாய்லாந்து கடற்படை.
இந்நிலையில் மீட்பு குழுவினர் நீச்சல் வீரர்கள் மூலம் வெளியிலிருந்து உணவுகளையும், ஆக்ஸிஜன் உருளைகளையும் அனுப்பி வைத்தனர். சில இடங்களில் குகையின் வழித்தடம் மிகவும் குறுகலாக இருந்ததால், வீரர்கள் நீந்திக்கொண்டே, ஆக்ஸிஜன் உருளைகளையும் தூக்கிக்கொண்டு செல்லும் நிலை உருவானது.
கடற்படை வீரர் பலி
ஜூலை 6-ம் தேதி, தாய்லாந்தின் முன்னாள் கடற்படை வீரர் ஒருவர் சிறுவர்களுக்கு ஆக்சிஜன் உருளைகளை கொடுத்துவிட்டு வெளிவரும்போது, வழியில் ஆக்சிஜன் தீர்ந்ததால் உயிரழந்தார்.
இது மீட்புக் குழுவை அதிர்ச்சி அடைய வைத்ததோடு, இது எவ்வளவு ஆபத்தான பணி என்பதையும் காட்டியது. அத்துடன், முன்னரே திட்டமிட்டபடி சில மாதங்கள் காத்திருப்பதில் ஒரு சிக்கலும் ஏற்பட்டது.
மீட்புத் திட்டம்
தொடர்ந்து மீட்பு பணியை தொய்வில்லாமல் தொடர்வோம் என்று மீட்புக்குழுவுனர் நம்பிக்கை தெரிவித்தனர். ஒரு கட்டத்தில் மழை பொழிவு தொடர்ந்து அதிகமாகியவுடன், சிறுவர்களை வெளியில் கொண்டு வருவது என்று முடிவு செய்யப்பட்டது. சிறுவர்களைக் குழுக்களாக பிரித்து, ஒவ்வொரு சிறுவனுக்கும் இரண்டு வீரர்கள் என்ற கணக்கில் மீட்பு பணி திட்டமிடப்பட்டது.
சிறுவர்கள் மீட்பு
இதையடுத்து, மீட்பு பணிகள் முழு வீச்சில் நடைபெற்றது. இதன் பலனாக கடந்த 8-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 4 சிறுவர்களும், 9-ம் தேதி 4 சிறுவர்களும் மீட்கப்பட்டனர்.
நேற்று மீதமிருந்த நான்கு சிறுவர்களையும் அவர்களது பயிற்சியாளரையும் வரிசையாக மீட்டு மீட்புக் குழுவினர் சாதனை படைத்தள்ளனர்.
குகைக்கு சீல்
அதன் பிறகு குகைக்கு சீல் வைத்தனர். மீட்கப்பட்ட அனைவரும் உடல் அளவிலும் மனதளவிலும் ஆரோக்கியமாக செய்திகள் வெளியாகியுள்ளன. குகையில் சிக்கிய அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டு இருப்பது அவர்களது குடும்பங்களை மட்டுமல்ல, ஒட்டுமொத்த உலகத்தையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.