கருணாஸ் மீது 6 பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு

சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ், முதல்வர் மற்றும் காவல்துறையையும் அவதூறாக பேசிய விவகாரத்தில் 6 பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

கடந்த 16-ம் தேதியன்று வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கருணாஸ் பேசினார்.

அப்போது சசிகலா இல்லையென்றால் இந்த ஆட்சி அமைந்திருக்காது. கூவத்தூர் விடுதியை பரிந்துரை செய்ததே நான்தான். நாங்கதான் கவுண்டரான எடப்பாடி பழனிச்சாமியை முதல்வர் ஆக்கினோம்.

நான் அடித்துவிடுவேன் என முதல்வரே பயப்படுகிறார் என்றும் மேலும் காவல்துறை அதிகாரி அரவிந்தனுக்கு சவால் விடுத்த கருணாஸ், முடிந்தால் காக்கிச்சட்டையை கழற்றிவிட்டு நேருக்கு நேர் மோதி பார்க்குமாறு சவால் விட்டார்.

கருணாஸ் ஜாதி ரீதியாகவும் பல்வேறு சர்ச்சை கருத்துக்களை பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இதனையெடுத்து முதல்வர் மற்றும் காவல்துறையை அவதூறாக பேசியதாக கருணாஸ் மீது நுங்கம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

யூ டுயூப்பில் வெளியான வீடியோவை ஆதாரமாக கொண்டு 6 பிரிவுகளின் கீழ் கருணாஸ் மீது வழக்குகள் பதியப்பட்டுள்ளது.

எனவே விரைவில் கருணாஸ் கைது செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.