தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தமிழகத்தில் லோக்சபா தேர்தலுக்காக 932 வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன என்று தெரிவித்தார்.
தமிழகத்தில் பாராளுமன்றத் தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் பரிசீலனை முடிந்த நிலையில், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அவர் கூறியதாவது:-
தமிழகத்தில் மக்களவைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக மொத்தம் 1587 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. அவற்றில் 655 மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. 932 மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன.
மக்களவைத் தேர்தலைப் பொருத்தவரை கரூர் தொகுதியில் அதிகபட்சமாக 43 பேரின் மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன. நீலகிரியில் குறைந்தபட்சமாக 10 மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன.
இதுவரை தேர்தல் தொடர்பாக 44 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. திமுக மீது 10, அதிமுக மீது 9, பாஜக மீது 2, பாமக மீது 3, மக்கள் நீதி மய்யம் கட்சி மீது 3 வழக்குகள் பதிவாகியுள்ளன.
தேர்தல் தொடர்பான வாகன தணிக்கைகளில், ரூ 50.70 கோடி பணம், 223.5 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என இவ்வாறு சத்யபிரதா சாஹூ கூறினார்.