இன்று விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்து சென்று கடலில் கரைப்பு - பலத்த போலீஸ் பாதுகாப்பு!

இன்று முதல் 3 நாட்களுக்கு விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்து சென்று, கடலில் கரைப்பதற்கு போலீசார் அனுமதி வழங்கியுள்ளனர்.

கடந்த 13-ம் தேதி விநாயகர் சதுர்த்தி தமிழகம் முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி சென்னை முழுவதும் பொது இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடும் செய்யப்பட்டது.

விநாயகர் சிலை ஊர்வலம் அனுமதிக்கப்பட்ட வழியிலேயே செல்ல வேண்டும், அனுமதிக்கப்பட்ட நேரத்தில்தான் இந்த ஊர்வலம் நடைபெற வேண்டும் என்பது போன்ற பல்வேறு விதிமுறைகளை போலீசார் பிறப்பித்திருக்கிறார்கள்.

முதல் நாளான இன்று, சுமார் 800 சிலைகள் கரைக்கப்படுகிறது. இன்று படினப்பாக்கம் ஸ்ரீசிவாசபுரம், நீலாங்கரை, காசிமேடு, எண்ணூர், திருவொற்றியூர் ஆகிய 5 பகுதிகளில் விநாயகர் சிலைகளை கரைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இதற்காக சென்னையில் மட்டும் 10, 000 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.