நடிகர் ரஜினிகாந்த் தான் 70 வயதிலும் சுறுசுறுப்பாக இருப்பது குறித்து விளக்கம் அளித்துள்ளார்.
ரஜினிகாந்த் நடித்துள்ள தர்பார் படம் வரும் 9-ம் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் திரைக்கு வரும் நிலையில் தெலுங்கு தர்பார் படத்துக்கான விளம்பர நிகழ்ச்சி நேற்றிரவு ஐதராபாத்தில் நடைபெற்றது.
அந்த நிகழ்ச்சியில் ரஜினி, முருகதாஸ், லைகா நிறுவனத்தை சேர்ந்த சுபாஷ்கரன், நிவேதா தாமஸ், சுனில் ஷெட்டி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அப்போது ரஜினிகாந்த் நிகழ்ச்சியில் கூறியதாவது:-
70 வயதிலும் எப்படி உங்களால் சுறுசுறுப்பாக இருக்க முடிகிறது? என எல்லோரும் தன்னிடம் கேட்பதாகக் கூறினார். அதற்கு நான் சொல்லும் பதில் ஒன்றுதான். /p>
கொஞ்சமாக ஆசைப்படுங்கள், கொஞ்சமாக சாப்பிடுங்கள், கொஞ்சமாக உடற்பயிற்சி செய்யுங்கள், கொஞ்சமாக தூங்குங்கள், கொஞ்சமாக பேசுங்கள் இதுதான் எனது சுறுசுறுப்புக்கு காரணம் என்று அவர் தெரிவித்தார்.
இந்த விழாவுக்கு வந்து இருப்பவர்களில் பெரும்பாலானவர்கள் எனது முதல் படம் வெளியானபோது பிறந்துகூட இருக்க மாட்டீர்கள் என்று நினைக்கிறேன். அப்போது இருந்து தொடர்ந்து நடித்து வருகிறேன். 160-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துவிட்டேன்.
தமிழ்நாட்டில் ரசிகர்கள் என்மீது எந்த அளவுக்கு அன்பு காட்டுகிறார்களோ, அதே அளவுக்கு தெலுங்கு ரசிகர்களும் அன்பு காட்டுவதை எனது பாக்கியம் என்றுதான் சொல்ல வேண்டும். தெலுங்கு மக்கள் சினிமா பிரியர்கள். என்னை ஆதரிக்கிறீர்கள்.
தமிழில் நான் நடித்து வெற்றி பெற்ற படங்கள் தெலுங்கிலும் ரிலீசாகி வெற்றி பெற்றுள்ளன. அந்த படங்கள் நன்றாக இருக்கிறது என்று நீங்கள் பார்த்தாலும், ரஜினி இருக்கிறார் என்பதற்காகவும் பார்க்கிறீர்கள் இதற்காக உங்களுக்கு நன்றி என இவ்வாறு ரஜினிகாந்த் பேசினார்.