சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் வட தமிழகத்தில் நாளை முதல் மணிக்கு 70 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும் என்று தெரிவித்தார்.
வானிலை ஆய்வு மண்டல இயக்குநர் பாலசந்திரன் இன்று அளித்த பேட்டியில்-:
ஃபனி புயல் தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் தற்பொழுது சென்னைக்கு தென் கிழக்கே சுமார் 870 கி.மீ தொலைவில் நிலைகொண்டுள்ளது. இன்று தீவிர புயலாகவும், நாளை அதிதீவிர புயலாகவும் வலுபெறக்கூடும்.
வரும் ஏப்ரல் 30-ம் தேதி (நாளை) முதல் மே 1-ம் தேதிவரை, வடமேற்கு திசையில் நகர்ந்து, வட தமிழகத்தின் கடற்கரை பகுதியில், 300 கிலோ மீட்டர் தொலைவு வரை வந்து பிறகு வடக்கு மற்றும் வடகிழக்கு திசையில் நகர்ந்து செல்லும்.
மழையை பொறுத்தளவில் ஏப்ரல் 30 மற்றும் மே 1 ஆகிய தேதிகளில் வட தமிழகத்தில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமானதுவரை மழை பெய்யக்கூடும்.
வட தமிழக கடற்கரை பகுதிகளில் நாளை காலை முதல் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும், சமயங்களில் 60 கிலோ மீட்டர் வேகத்திலும் காற்று வீசக்கூடும்.
நாளை மாலை முதல் 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்திலும், மாலையில் சில நேரங்களில் 70 கிலோ மீட்டர் வேகத்திலும் காற்று வீசக்கூடும்.
மீனவர்கள் ஏப்ரல் 29, 30 மற்றும் மே 1, 2 ஆகிய தேதிகளில் தென் மேற்கு மற்றும் மத்திய மேற்கு வங்க கடற்பகுதிகளுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள் என இவ்வாறு பாலச்சந்திரன் தெரிவித்தார்.