ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு படத்தின் டைட்டில் - 'தி அயர்ன் லேடி'
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தின் தலைப்பை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
இயக்குனர் மிஷ்கினிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய ஆ.பிரியதர்ஷினி என்பவர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தை இயக்கவுள்ளார்.
இந்த படத்திற்கு 'தி அயர்ன் லேடி' என்ற டைட்டில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தப் படத்தில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடிகை நித்யா மேனனும், சசிகலாவின் கதாபாத்திரத்தில் வரலட்சுமி சரத்குமாரும் நடிக்கின்றனர்.
இப்படத்தின் இயக்குநர் ஆ.பிரியதர்ஷினி ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார்.
அந்த அறிக்கையில்....
இந்திய மக்களாலும் அதிகம் நேசிக்கப்பட்ட இரும்புப் பெண்மணியான ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றைப் படமாக எடுப்பதற்கான பணிகள் கடந்த நான்கு மாதங்களாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
ஒரு பெண்ணாக மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை இயக்குவதற்கான வாய்ப்பை பெருமையாக நினைப்பதை காட்டிலும், கடமையாக உணர்கிறேன். முன்னணி நடிகர்கள் நடிக்க தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் தயாராகவுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு பிப்ரவரி 24 - ம் தேதி துவங்க திட்டமிடப்பட்டுள்ளது என்று கூறப்பட்டிருந்தது.
பேப்பர்டேல் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும், இந்த படத்தின் தொடக்கவிழா விரைவில் பிரமாண்டமாக நடைபெறவுள்ளது.