சில்க் சுமிதா நடித்த கடைசி படம் ராக தாளங்கள் திரைக்கு வருகிறது
தமிழ் சினிமாவின் கவர்ச்சி நடிகை சில்க் சுமிதா கடைசியாக நடித்து வெளிவராமல் இருந்த "ராக தாளங்கள்" படத்தை ரிலீஸ் செய்ய உள்ளதாக படத்தின் இயக்குநர் திருப்பதி ராஜன் கூறியுள்ளார்.
தமிழ் சினிமாவில் சில்க் சுமிதா மறக்க முடியாத ஒரு நடிகை. கவர்ச்சி நடிகையாக வலம் வந்தவர்.
1980-ல் சில்க் சுமிதா அறிமுகமாகி தென்னிந்திய சினிமாவின் கவர்ச்சி கன்னியாக திகழ்ந்தவர். கடந்த 1996-ம் ஆண்டு மர்மமான முறையில் இறந்தார். இவரது தற்கொலை தமிழ் சினிமாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இவரது வாழ்க்கை படமாக பாலிவுட்டில் திரைப்படம் வெளிவந்து வரவேற்பைப் பெற்ற பிறகு, அவர் நடித்த கடைசி திரைப்படத்தை வெளியிட இப்போது திட்டமிட்டுள்ளனர்.
1995-ம் ஆண்டு, சாதிப் பிரச்சனையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படம் "ராக தாளங்கள்". சர்ச்சைக்குரிய காட்சிகள் இருப்பதாகக் கூறி சென்சார் நிராகரித்ததால் ரிலிஸ் செய்யப்படவில்லை.
சில்க் சுமிதா இறந்து 22 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அப்படத்தை ரிலீஸ் செய்ய முயற்சிகள் எடுத்துவருவதாக அப்படத்தின் இயக்குனர் திருப்பதி ராஜன் தெரிவித்துள்ளார்.