கீர்த்தி சுரேஷ் - சிறந்த நடிகைக்கான தேசிய விருது பெற்றார்
66-வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழா புது டெல்லியில் உள்ள விக்யான் பவனில் நடைபெற்றது.
2019-ம் ஆண்டுக்கான திரைப்பட விருதுகள் கடந்த ஆகஸ்ட் மாதம் அறிவிக்கப்பட்டது.
விருதுகள் வழங்கும் நிகழ்ச்சியில் மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகரும் பங்கேற்றுள்ளார். தேசிய விருதுகளை குடியரசுத் தலைவர் வழங்குவது வழக்கமாக இருந்து வருகிறது. ஆனால், இந்த முறை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு பதிலாக வெங்கய்ய நாயுடு விருதுகளை வழங்கினார்.
இன்று நடைபெற்ற விருது வழங்கும் விழாவில், சிறந்த நடிகைக்கான தேசிய விருதை கீர்த்தி சுரேஷ் பெற்றுக் கொண்டார்.
நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்த மகாநடி படம் சிறந்த தெலுங்குப் படம் என்கிற தேசிய விருதைப் பெற்றது. மேலும் அதே படத்துக்காக சிறந்த நடிகை என்கிற தேசிய விருதையும் பெற்றுள்ளார்.
அவர் விருது பெறும்போது அவரது தாயார் எழுந்து நின்று கைதட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
விருதுகளை பெற்றவர்களுக்கு இன்று மாலை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தேநீர் விருந்து அளிக்கவுள்ளார்.