முதல்வர் எடப்பாடி பழனிசாமி இந்தியாவின் முதல் மின்சார காரை ஹூண்டாய் நிறுவனத்தின் கோனா என்ற மின்சாரக் காரை தலைமைச் செயலகத்தில் இன்று அறிமுகம் செய்து வைத்தார்.
கடந்த ஜனவரி மாதம் சென்னையில் நடைபெற்ற உலக முதலீட்டாளர் மாநாட்டில், மின்சாரக் கார் உற்பத்திக்காக தமிழகத்தில் 7 ஆயிரம் கோடி ரூபாயை ஹூண்டாய் நிறுவனம் முதலீடு செய்வதாக ஒப்பந்தம் செய்து கொண்டது.
இந்த ஒப்பந்தத்தின் படி ஸ்ரீபெரும்புதூரில் உள்ள அந்நிறுவனத்தின் ஆலையில், கோனா என்ற மின்சாரக் காரின் உற்பத்தி தொடங்கியது.
முழுக்க முழுக்க இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட முதல் மின்சாரக் கார் என்ற பெருமையுடன் தற்போது களத்தில் இறங்கியுள்ளது கோனா.
இந்தக் காரை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தலைமைச் செயலகத்தில் இன்று அறிமுகம் செய்து, கொடியசைத்து துவக்கி வைத்து, வாகனத்தில் பயணம் செய்தார்.
இந்நிகழ்ச்சியில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் எம்.சி. சம்பத், கடம்பூர் ராஜூ, தலைமைச் செயலாளர் சண்முகம் தொழில்துறை முதன்மைச் செயலாளர் முருகானந்தம், தொழில் துறை சிறப்புச் செயலாளர் அருண்ராய், மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
மின்சாரக் கார் உயர் தொழில்நுட்பத்துடன் சுற்றுச்சூழலுக்கு உகந்ததாகவும், 57 நிமிடங்களில் 80 சதவிகிதம் வரை சார்ஜ் செய்யும் வசதி கொண்ட மின்கலன் பொருத்தப்பட்டு, ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால் 452 கிலோமீட்டர் தூரம் செல்லும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
காரின் ஷோரூம் விலை வரிகளுக்கு முந்தைய 25 லட்சம் ரூபாய். ஆன்ரோடு விலை 30 லட்சம் ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.