குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டவர்கள் தேர்தலில் நிற்க தடை இல்லை - உச்ச நீதிமன்றம் தீர்ப்பு
குற்றச்சாட்டு பதிவுசெய்யப்பட்ட எம்.பி, எம்.எல்.ஏக்களை இனி தேர்தலில் நிற்க கூடாது எனத் தங்களால் தடை விதிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
குற்றப் பின்னணி உள்ளவர்களே தேர்தல்களில் அதிகமாக போட்டியிடுகின்றனர். அதனால் மக்கள் தங்கள் பிரதிநிதிகளாக குற்றவாளிகளையே தேர்ந்தெடுக்க நேர்கிறது. அதை தடுப்பதற்காக குற்றப் பின்னணி உள்ளவர்கள் தேர்தலில் நிற்பதைத் தடை செய்யும் விதமாக பொதுநல வழக்கு ஒன்று தொடரப்பட்டது.
இன்று அந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நீதிபதி தீபக் மிஸ்ரா அடங்கிய அமர்வுக்கு விசாரணைக்கு வந்தது.
உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் கூறியிருப்பது:-
குற்றச்சாட்டு பதிவுசெய்யப்பட்ட எம்.பி, எம்எல்ஏ.க்கள் தேர்தலில் போட்டியிடக் கூடாது எனத் தடை விதிக்க முடியாது. அரசியலில் குற்றப் பின்னணி கொண்டவர்களை அகற்ற நாடாளுமன்றமே தக்க சட்டங்களை உருவாக்க வேண்டும். தேர்தலுக்கு முன்பு வேட்பாளர்கள் தங்களின் குற்றப்பின்னணியை தேர்தல் ஆணையத்திடம் தெரிவிக்க வேண்டும்.
மேலும் வேட்பாளர்களின் குற்றப்பின்னணியை அவர்கள் சார்ந்த கட்சியே வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். அதைத் தெரிந்துகொண்டு தேர்தலில் யாருக்கு வாக்களிப்பது என்று பொதுமக்களால் முடிவெடுக்க இயலும்.
குற்றப் பின்னணி கொண்ட வேட்பாளர்களை எவ்விதம் நடத்துவது என்பதை முடிவு செய்யும் அதிகாரம் தேர்தல் ஆணையத்துக்கு வழங்கப்பட வேண்டும். இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
குற்ற வழக்குகளில் தண்டனை பெறும் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்வதற்கு வழிவகை செய்யும் சட்டம் தற்போது நடைமுறையில் உள்ளது.