தேவசம் போர்டு - சபரிமலை தீர்ப்புக்கு எதிராக மறு ஆய்வு மனு இல்லை

சபரிமலை தீர்ப்புக்கு எதிராக மறு மேல்முறையீடு செய்ய போவதில்லை என்று தேவசம் போர்டு தெரிவித்துள்ளது.

சபரிமலை கோவிலில் பல நூற்றாண்டுகளாக 10 வயது முதல் 50 வயது வரை உள்ள பெண்கள் சென்று வழிபடுவதற்கு தடை உள்ளது. இந்த வயதுக்கு உட்பட்ட காலத்தில் பெண்கள் மாதவிடாய் நிலையை எதிர்கொள்வதால் அவர்கள் கோவிலுக்கு செல்ல அனுமதி மறுக்கப் படுகிறது.

உலகப் புகழ்பெற்ற கேரளாவில் சபரிமலை ஐயப்பன் கோவிலில் 10 முதல் 50 வயது வரை உள்ள பெண்களையும் அனுமதிக்க கோரி தொடுக்கப்பட்ட வழக்கில், உச்ச நீதிமன்றம் அனைத்து வயது பெண்களுக்கும் அனுமதி அளித்து தீர்ப்பு வழங்கி உள்ளது.

இதனால் அனைத்து வயது பெண்களும் இனி சபரிமலை கோவிலுக்குள் செல்ல முடியும். இந்த நிலையில் இந்த தீர்ப்பிற்கு திருவாங்கூர் தேவசம் போர்ட் எதிர்ப்பு தெரிவித்து இருந்தது.

சுப்ரீம் கோர்ட் தீர்ப்புக்கு எதிராக கேரளாவில் நேற்று பல்வேறு இடங்களில் போராட்டம் நடைபெற்ற நிலையில், தீர்ப்புக்கு எதிராக மறு ஆய்வு மனு தாக்கல் செய்ய மாட்டோம் என்று கேரள முதல் மந்திரி பினராயி விஜயன் தெரிவித்தார்.

இந்த நிலையில் தேவசம் போர்டும், சுப்ரீம் கோர்ட் தீர்ப்புக்கு எதிராக மறு ஆய்வு மனு தாக்கல் செய்யப்போவது இல்லை என்று தெரிவித்துள்ளது.

தேவசம் போர்டு தலைவர் ஏ.பத்மகுமார் கூறியதாவது:-

உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக நாங்கள் மேல்முறையீடு செய்யவில்லை. சபரிமலையில் பெண்களை அனுமதிப்போம், சபரிமலை தீர்ப்பு குறித்த உச்சநீதிமன்றத்தின் வழிமுறைகளை கடைப்பிடிக்க முன்வந்துள்ளோம் என்றார்.