ஜனாதிபதி 73வது பிறந்தநாள் - பல்வேறு தலைவர்கள் வாழ்த்து

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் பிறந்தநாளையொட்டி, பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று தனது 73-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இதையொட்டி அவருக்கு பல்வேறு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தவண்ணம் உள்ளனர். சமூக வலைத்தளங்களிலும் வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.

பிரதமர் மோடி டுவிட்டரில் வாழ்த்து செய்தி பதிவிட்டுள்ளார்.

அதில், ஜனாதிபதியின் ஞானம் மற்றும் பல்வேறு விஷயங்களில் அவரது செயல்பாடுகளால் இந்தியா பெரிதும் பயனடைந்திருக்கிறது. நமது சமுதாயத்தின் ஒவ்வொரு பிரிவிலும் அவர் இணைந்திருக்கிறார். அவர் நீண்ட காலம் ஆரோக்கியமாக வாழ நான் பிரார்த்தனை செய்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பூங்கொத்துடன் வாழ்த்து கடிதம் அனுப்பி உள்ளார்.

மதிப்பிற்குரிய ஜனாதிபதிக்கு கடவுள் நல்ல ஆரோக்கியத்தையும் நீண்ட ஆயுளையும் வழங்க பிரார்த்தனை செய்வதாக நிதி மந்திரி அருண் ஜெட்லி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதேபோல் பாரதீய ஜனதா தேசிய தலைவர் அமித் ஷா, பாதுகாப்புத்துறை மந்திரி நிர்மலா சீதாராமன், ஜவுளித்துறை மந்திரி ஸ்மிருதி இரானி, உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் ஜனாதிபதிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.