அரசியல் சட்டப்படி ஆதார் அடையாள அட்டை செல்லும்! - உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!!

அரசின் அனைத்து நல திட்டங்களை பெற ஆதார் எண் கட்டாயம் என உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கி உள்ளது.

வங்கிச் சேவை, வருமான வரி கணக்கு, செல்போன் இணைப்பு, மற்றும் அரசின் பல்வேறு நலத்திட்டங்களின் பலன்களை பெற ஆதார் எண் இணைப்பு கட்டாயம் என மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது.

இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன.

இந்த ஆதார் தொடர்பான வழக்கு தலைமை நீதிபதி தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரித்து வந்தது. விசாரணையின்போது, கடந்த மார்ச் மாதம் 31-ம் தேதிக்குள் அனைத்து சேவைகளும் பெற ஆதார் எண்ணை கட்டாயம் வழங்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டு இருந்தது. அந்த உத்தரவுக்கு எதிராக இடைக்கால தடை விதிக்கப்பட்டது.

இறுதி தீர்ப்பு வரும் வரை வங்கி, தொலைபேசி சேவை உள்பட எதற்கும் ஆதார் எண் கட்டாயமாக்க கூடாது என்று உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்தனர்.

இந்த வழக்கில் இன்று காலை தீர்ப்பு வழங்கப்பட்டது. தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, ஏகே சிக்ரி, கான்வில்கர் ஆகிய மூன்று நீதிபதிகளும் ஆதார் செல்லும் என ஒரே மாதிரியான தீர்ப்பை அளித்துள்ளனர்.

மூன்று நீதிபதிகள் சார்பாக நீதிபதி ஏகே சிக்ரி தீர்ப்பை வாசித்தார்.

அதில், சிறந்ததாக இருப்பதை விட தனித்துவமாக இருப்பதே மேல் கடந்த சில ஆண்டுகளில் அதிகமாக பேசப்படும் ஒன்றாக ஆதார் மாறி இருக்கிறது ஒருவருக்கு கொடுக்கப்படும் ஆதார் அடையாள அட்டையை வேறு ஒருவருக்கு கொடுக்க முடியாத வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது .

எந்த வகையிலும் ஆதார் எண்ணை போலியாக உருவாக்க முடியாது.

ஆதார் அடையாள அட்டைக்கும் மற்ற அடையாள அட்டைகளுக்கும் வித்தியாசம் உள்ளது. ஆதார் என்பது மற்ற அடையாள ஆவணங்கள் போன்றது அல்ல.

எனவே ஆதார் அரசியல் சாசனத்திற்கு உட்பட்டது. ஆனால் அதில் சிறு திருத்தங்கள் செய்ய வேண்டும். ஆதார் எண்களை தனியார் நிறுவனங்கள் கேட்க முடியாது. தேச பாதுகாப்புக்கு மட்டுமே ஆதாரை பயன்படுத்த வேண்டும். என நீதிபதிகள் தீர்ப்பு வழங்கினர்.

அதுபோலவே ஆதார் எண் இல்லை என்பதற்காக தனிநபர்களுக்கு அரசின் சலுகைகள், உதவிகள் கிடைக்காமல் தடுத்து நிறுத்தப்படுவதை ஏற்றுக் கொள்ள முடியாது.

வங்கிகள், மொபைல் இணைப்பு பெற ஆதார் தேவை என கட்டாயப்படுத்தக்கூடாது. அதேசமயம் பான் எண்ணுடன் ஆதார் எண் இணைக்கும் உத்தரவு சரியானதே என நீதிபதிகள் தீர்ப்பு வழங்கினர்.