தகாத உறவு கிரிமினல் குற்றம் இல்லை - உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

வயதுக்கு வந்த ஆண் - பெண் இடையேயான கள்ளத்தொடர்பு தற்கொலைக்குத் தூண்டப்படாத வரை அது குற்றச் செயல் இல்லை என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இந்தியத் தண்டனைச் சட்டம் 497 என்பது திருமண உறவுக்கு வெளியே பாலியல் உறவு கொள்வோருக்கு தண்டனை வழங்கும் சட்டமாகும். இதில் ஆண்களுக்குத்தான் தண்டனை உண்டு. பெண்களுக்குக் கிடையாது.

ஒரு பெண் தனது கணவரின் அனுமதி அல்லாமல் வேறு ஒரு ஆணுடன் திருமணத்துக்கு அப்பாற்பட்டு உறவு கொண்டால் அது தண்டனைக்குரிய குற்றம் என்று 497-ம் பிரிவு கூறுகிறது. ஆனால் இதில் அந்த பெண் தண்டிக்கப்பட மாட்டார். ஆண் மட்டுமே தண்டிக்கப்படுவார்.

கள்ளக் காதலில் ஈடுபடும் ஆணுக்கு மட்டும் தண்டனை வழங்கப்படுகிறது. அதுவே பெண்ணுக்கு எந்த தண்டனையும் இல்லை. எனவே, இந்திய தண்டனைச் சட்டம் 497வது பிரிவை மாற்ற வேண்டும் என்று ஜோசப் என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இது தொடர்பான வழக்கில் இன்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. உச்சநீதிமன்ற நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான 5 பேர் கொண்ட அமர்வு இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது.

தீர்ப்பில் கூறி இருப்பதாவது:-

தகாத உறவு என்பது சட்டவிரோதம் அல்ல. இந்த சட்டத்தின்படி தகாத உறவில் ஈடுபடும் ஆணுக்கு மட்டும் தண்டனை விதிப்பது என்பது ஏற்கத்தக்கதல்ல. தகாத உறவு கிரிமினல் குற்றமல்ல. இந்த தகாத உறவு யாரையும் தற்கொலைக்கு தூண்டாத வரையில் இதை குற்றமாக கருத முடியாது.

ஒரு பெண்ணுடைய எஜமானராக கணவரை ஒருபோதும் கருத முடியாது. ஆணுக்கு சமமாக பெண்ணை நடத்த வேண்டும். ஆணுக்கு மட்டும் தண்டனை பிரிவு சட்டவிரோதமானது. இந்திய தண்டனைச் சட்டப்பிரிவு 497வது பிரிவு ரத்து செய்யப்படுகிறது என நீதிபதிகள் கூறினர்.